உலு சிலாங்கூர், மே 11- தங்கள் தொகுதிக்கான புதிய சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க கோல குபு பாரு தொகுதியைச் சேர்ந்த 39,362 வாக்காளர்கள் இன்று தங்கள் வாக்குகளைச் செலுத்தவுள்ளனர்.
இந்த இடைத் தேர்தலை முன்னிட்டு மொத்தம் 18 வாக்களிப்பு மையங்களில் உள்ள 74 வாக்குச் சாவடிகள் இன்று காலை 8.00 மணிக்குத் திறக்கப்பட்டன.
தங்கள் ஜனநாயக க் கடமையை நிறைவேற்றுவதற்கு இன்று காலை 7.15 மணி முதல் வாக்காளர்கள் வாக்குச் சாவடி முன் வரிசையில் காத்திருப்பதைக் காண முடிந்தது.
சில வாக்குச்சாவடிகளில் மாற்றுத் திறனாளிகள் தங்கள் வாக்குகளைச் செலுத்துவதைக் காண முடிந்தது. அவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களும் தேர்தல் பணியாளர்களும் உதவி புரிந்தனர்.
எழுபத்தைந்து வயது முதியவரான ரோஸ்லி சரிப் சக்கர நாற்காலி மூலம் பண்டார் பாரு பத்தாங் காலி வாக்குச் சாவடிக்கு தனியாக வந்திருந்தார். தனது வீடு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாக அவர் சொன்னார்.
நான் 21 வயது முதல் வாக்களித்து வருகிறேன். பொருத்தமான வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நமது எதிர்காலத்தை தீர்மானிக்க வாக்களிக்கும் கடமையை நிறைவேற்றுவது மிக முக்கியமாகும் என்றார் அவர்.
தாம் முதன் முறையாக இந்த தேர்தலில் வாக்களிப்பதாக ஆறாம் படிவ மாணவியான யாப் யூ செங் (வயது 19) கூறினார்.
டத்தாரான் கோல குபு பாருவில் காலை 8.30 மணிக்கு நடைபெறும் பள்ளி நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டியுள்ளதால் முன்கூட்டியே வாக்களிப்பதற்காக காலை 7.50 மணிக்கே நான் வாக்குச் சாவடிக்கு வந்து விட்டேன் என்றார் அவர்.
கோல குபு பாரு தொகுதி இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசு. பெரிக்கத்தான் நேஷனல், பார்ட்டி ராக்யாட் மலேசியா (பிஆர்எம்) மற்றும் சயேச்சை இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
ஒற்றுமை அரசின் சார்பில் பாங் சோக் தாவ், பெரிக்கத்தான் நேஷனல் சார்பில கைருள் அஸ்ஹாரி சவுட், பி.ஆர்.எம். கட்சி சார்பில் ஹபிஷா ஜைனுடின் மற்றும் சுயேச்சையாக ங்காவ் கீ ஷின் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.








