NATIONAL

கே.கே.பி. இடைத் தேர்தல்- இன, சமய விவகாரங்கள் பயன்படுத்தும் இக்கட்டான நிலையில் பெரிக்கத்தான் கூட்டணி

2 மே 2024, 7:22 AM
கே.கே.பி. இடைத் தேர்தல்- இன, சமய விவகாரங்கள் பயன்படுத்தும் இக்கட்டான நிலையில் பெரிக்கத்தான் கூட்டணி

புத்ரஜெயா, மே 2- கோல குபு பாரு இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்காளர்களிடம் முன்வைப்பதற்கு ஆக்ககரமான கருத்துகள் இல்லாத நிலையில் தாய் மொழிப் பள்ளிகள் உட்பட இன மற்றும் சமய விவகாரங்கள் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு பெரிக்காத்தான் நேஷனல் தள்ளப்பட்டுள்ளதாகப் பி.கே.ஆர். கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு இயக்குநர் ஃபஹ்மி பாட்சில் கூறினார்.

ஆகவே, தங்களைத் தாங்களே படுகுழியில் தள்ளிக் கொள்வதற்கு சமம் என்பதால் இடைத் தேர்தல் பிரசாரத்தின் போது இனவாத விவகாரங்களை எழுப்புவதை பெரிக்கத்தான் தேர்தல் இயந்திரம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தகவல் தொடர்பு அமைச்சருமான அவர் சொன்னார்.

எத்தனை பாஸ் கட்சித் தலைவர்கள் தங்கள் பிள்ளைகளை சீனப் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர் என்று தெரியுமா? பாஸ் கட்சித் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கின் பேரப்பிள்ளைகள் சீனப்பள்ளியில் பயில்வதாக நான் அறிகிறேன் என்று அவர் சொன்னார்.

நேற்று இங்குள்ள புத்ராஜெயா பிரிசிண்ட் 11இல் பக்கத்தான் ஹராப்பான் அலுவலகத்தை திறந்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நாட்டு மக்கள் மிதவாதப் போக்கை கடைபிடிக்கின்றனர். தாய் மொழி பள்ளிகள் உள்பட இன விவகாரத்தை அரசியல் கட்சிகள் எழுப்புவது முதிர்ச்சியற்ற செயலாகும் என அவர்  கூறினார்.

கோல குபு பாரு இடைத் தேர்தல் பிரசாரம் நேற்றுடன் ஐந்தாவது நாளை எட்டிய போதிலும் பெரிக்கத்தான் நேஷனல் இன்னும் குழப்ப நிலையில் தான் உள்ளது. பெரிக்கத்தானுக்கு எதிராக புறக்கணிப்பு நடவடிக்கையில் பாஸ் கட்சியினர் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது என்றார் அவர்.

இத் தேர்தலில் போட்டியிடும் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாங் சோக் தாவின் கல்விப் பின்னணி குறித்து பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் ஃபாட்லி சஹாரி முன்னதாகக் கேள்வியெழுப்பிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.