செய்தி ; சு.சுப்பையா
கோல குபு பாரு மே.1- கோல குபு பாரு சட்டமன்றத்தில் 2 குருத்வாராக்கள் உள்ளன. இராசாவிலும் மற்றும் கோல குபு பாரு பட்டணத்திலும் அவை அமைந்துள்ளன. நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் புவான் பாங் சோக் தாவிற்கு ஆதரவு திரட்டுவதில் டிஜிட்டல் அமைச்சர் கோபின் சிங் முன்னணி வகிக்கிறார்.
ராசா குருத்வாராவுக்கு வேட்பாளர் புவான் பாங்குடன் சென்று அங்குள்ள பஞ்சாபியர்களை கண்டார். அவர்களுடன் இன்று மாலை தேநீர் மற்றும் பலகாரங்களுடன் உபசரிப்பு கலந்துரையாடலில் பங்குபெற்றார்
குருத்வாராவில் நடந்த சந்திப்பில் கலந்துக் கொண்ட பஞ்சாபியர்கள் நம்பிக்கை கூட்டணி வேட்பாளருக்கு பிளவுபடாத ஆதரவை தரும்படி கோபின் சிங் கேட்டுக் கொண்டார்.
குருத்வாராவுக்கு வருகைதந்திருந்த மூத்தவர்கள் தங்களது ஆதரவை தெரிவித்தார். அதே போல் கோல குபு பாருவிலும் உள்ள எல்லா பஞ்சாபியர்களும் தங்களது பிளவுபடாத ஆதரவை வழங்குவார்கள் என்று உறுதி கூறினார்.
இதனிடையே தாம் வெற்றி பெற்றால் கோல குபு பாரு சட்டமன்றத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன். மேலும் இப்பகுதியை சுற்றுலா தளமாக தரம் உயர்த்தி புதிய வியாபார வாய்ப்புகள் உருவாக்குவேன் என்று வாக்குறுதி கொடுத்தார்.
இப்பகுதியில் இருக்கும் பஞ்சாபியர்கள் பெரும்பான்மையினர் சொந்த தொழில் செய்கின்றனர். சொந்தமான லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர். லாரிகள் மற்றும் பேருந்துகள் செலுத்த இவ்வட்டாரத்தில் உள்ள சாலைகளை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு தாம் வெற்றி பெற்றால் கடுமையான முயற்சி எடுப்பேன் என்று வேட்பாளர் பாங் கூறினார்.








