ரியாத், ஏப் 30- இஸ்ரேலின் கோரத் தாக்குதலில் காயமுற்ற பாலஸ்தீன
மக்களுக்கு சிகிச்சையளிப்பதில் கட்டார் மற்றும் இதர மேற்காசிய
நாடுகளுடன் ஒத்துழைக்க மலேசியா தயாராக உள்ளதாகப் பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இங்கு நடைபெறும் உலகப் பொருளாதார ஆய்வரங்கின் சிறப்புக்
கூட்டத்தின் இடைவேளையில் கட்டார் பிரதமரும் வெளியுறவு
அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜஸிம் அல்
தானியுடன் நடத்திய சந்திப்பின் போது இந்த வாக்குறுதியை பிரதமர்
வழங்கினார்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் மலேசியரான நுருள் அய்ன் ஹருண்
காஸாவிலிருந்து பத்திரமாக வெளியேறுவதில் பெரும் பங்காற்றியதற்காகக்
கட்டாருக்கு பாராட்டுதலையும் நன்றியையும் அன்வார் இந்த சந்திப்பின்
போது தெரிவித்துக் கொண்டார்.
போர் நிகழும் காஸா பகுதியிலிருந்து நுர் அய்ன் தனது பாலஸ்தீன
கணவரான முகமது ஏஎம் ஷாஹாட்டுடன் ராஃபா எல்லை வழியாக
பத்திரமாக வெளியேறி கடந்தாண்டு நவம்பர் 14ஆம் தேதி மலேசியா
வந்தடைந்தார்.
பாலஸ்தீன விவகாரத்தில் கட்டார் ஆற்றி வரும் மத்தியஸ்தர் பணிக்குத்
தனது முழு ஆதரவை மலேசியா வழங்கும் என்றும் அன்வார்
இச்சந்திப்பின் போது வாக்குறுதியளித்தார்.
காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் மலேசியா
தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் இது வரை 100 டன் உதவிப்
பொருள்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ள வேளையில் மேலும் 20 டன்
பொருள்களை கடல் மார்க்கமாக அனுப்புவதற்கான ஏற்பாடுகள்
செய்யப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.
இதுவரை 1,500 டன் உதவிப் பொருள்கள் மலேசியாவிலுள்ள அரசு சாரா
அமைப்புகள் மூலம் காஸாவில் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றும் அவர்
தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம்
மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் இரு நாட்டுத் தலைவர்களும்
விவாதித்தனர். தற்போது மலேசியா- கட்டார் இடையிலான வர்த்தக மதிப்பு
91 கோடி அமெரிக்க டாலராக (434 கோடி வெள்ளி) உள்ளது.


