சிப்பாங், ஏப் 30- கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய
(கே.எல்.ஐ.ஏ.) சரக்கு மையத்தில் பார்சல் பொட்டலம் மீது வெடிகுண்டு
அச்சுறுத்தல் தொடர்பான வாசகத்தை எழுதியதை ஒப்புக் கொண்ட கிடங்கு
பணியாளர் ஒருவருக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 3,000 வெள்ளி
அபராதமும் நான்கு நாள் சிறைத்தண்டனையும் விதித்தது.
தனக்கு எதிராக குற்றச்சாட்டை முகமது ரசாலி ரஹிம் (வயது 23) என்ற
அந்த ஊழியர் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் முகமது
புக்கோரி முகமது ருஸ்லான் இந்த தீர்ப்பை வழங்கினார்.
கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி காலை 11.42 மணியளவில் அந்த சரக்கு
மையத்தின் ஸ்கேன் இயந்திரப் பகுதியில் பொட்டலம் ஒன்றின் மீது
கிரிமினல் ரீதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான வாசகத்தை
எழுதியதாக அவ்வாடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கூடுதல் பட்சம் ஈராண்டுச் சிறை,
அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் தண்டனைச்
சட்டத்தின் 506வது பிரிவின் கீழ் முகமது ரசாலி குற்றச்சாட்டை
எதிர்நோக்கியிருந்தார்.
கே.எல்.ஐ.ஏ. சரக்கு மைய ஸ்கேன் இயந்திரப் பகுதியில் வெடிகுண்டு
தொடர்பான அச்சுறுத்தல் பெறப்பட்டது தொடர்பில் தாங்கள் புகாரைப்
பெற்றுள்ளதாக கே.எல்.ஐ.ஏ. மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்மான்
ஷாரியாட் முன்னதாகக் கூறியிருந்தார்.


