NATIONAL

தாய்லாந்து எல்லை பாதுகாப்பு அச்சுறுத்தல்-மலேசியாவுக்கான வழிகள்  மூடப்பட்டன

30 ஏப்ரல் 2024, 3:13 AM
தாய்லாந்து எல்லை பாதுகாப்பு அச்சுறுத்தல்-மலேசியாவுக்கான வழிகள்  மூடப்பட்டன

நாரதிவாட், ஏப் 30 - மலேசியா-தாய்லாந்து எல்லைப் பகுதியில் உள்ள தக் பாய், சுங்கை கோலோக் மற்றும் வெங் ஆகிய மாவட்டங்களில் இருந்து மலேசியாவுக்கு நுழையும்  அனைத்து வழிகளும் தற்காலிகமாக மூடப்பட்டன.

நேற்று அங்கு நடந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நான்கு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்ததைத் தொடர்ந்து  பாதுகாப்புக்காக   இந்த   நடவடிக்கை   எடுக்கப் பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வெடிகுண்டு செயலிழப்பு பணி குழுவினர், நெடுஞ்சாலையில் சிதறிய ஆணிகளைக் கண்டறிந்ததை அடுத்து, தக் பாய் மாவட்டத்திலிருந்து சுங்கை கோலோக்கிற்குச் செல்லும் சாலை சோதனை நடவடிக்கைக்காக மூடப்பட்டுள்ளது என்று சுங்கை கோலோக் மாவட்ட காவல்துறை தலைவர் போல் கர்னல் ஜட்சாடாவிட் இன்பிரபன் கூறினார்.

"தாக்குதல் நடத்தியவர்களில் சிலர் ஆற்றுப் பாதை வழியாக மலேசியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும், மற்றவர்கள் அருகில் உள்ள பகுதிகளில் பதுங்கி இருப்பதாகவும் காவல்துறை நம்புகிறது," என்று அவர் சம்பவ இடத்தைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

நள்ளிரவு 12.05 மணியளவில் சுங்கை கோலோக் நகருக்கு அருகில் பணியில் இருந்த நான்கு அதிகாரிகள்   சென்ற வாகனம் திடீரென வெடித்ததில் காயமடைந்தனர்.

முதற்கட்ட காவல்துறை விசாரணையில் மூன்று செயலற்ற வெடிகுண்டுகள், 50 தோட்டா உறைகள் மற்றும் சம்பவ இடத்திற்கு அருகில் சிதறிய ஆணிகள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டதாக ஜட்சாடாவிட் கூறினார்.

எனினும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இதற்கிடையில், சோங்கலாவில் உள்ள மலேசியாவின் கன்சல் ஜெனரல் அஹ்மட் ஃபஹ்மி அஹ்மட் சர்காவியை தொடர்பு கொண்டபோது, சம்பவத்தில் மலேசியர்கள் யாரும் காயமடையவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.