ஷா ஆலம், ஏப் 30 - காப்பார் தாமான் ஜெயாவிலுள்ள வீடொன்றில்
வர்த்தகர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை படுகொலை செய்யப்பட்டது
தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக இரு உள்ளூர் ஆடவர்களை
போலீசார் கைது செய்துள்ளனர்.
இருபத்தைந்து மற்றும் 29 வயதுடைய அவ்விரு ஆடவர்களும் கடந்த
சனிக்கிழமையும் நேற்றும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது
கைது செய்யப்பட்டதாக வடகிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி
விஜயராவ் கூறினார்.
கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட ஆடவர் விசாரணைக்காக ஏழு
நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ள வேளையில் நேற்று கைது
செய்யப்பட்ட ஆடவரை விசாரணைக்காகத் தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற
அனுமதி இன்று பெறப்படும் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த படுகொலைக்குப் பழிவாங்கல் காரணமாக இருக்கலாம் என
சந்தேகிக்கப்படுவதாகக் கூறிய விஜயராவ், இப்படுகொலை நிகழ்ந்த போது
அந்த வீட்டில் இருந்த பாதிக்கப்பட்டவரின் மனைவி மற்றும் பிள்ளை
தவிர்த்து புதிய சாட்சி ஒருவரிடமிருந்தும் தாங்கள் வாக்குமூலம் பதிவு
செய்துள்ளதாகச் சொன்னார்.
இந்த படுகொலையில் தொடர்புடைய இதர சந்தேக நபர்களைக் கண்டு
பிடிக்கும் முயற்சியில் தாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர்
தெரிவித்தார்.
முப்பத்தெட்டு வயதுடைய அந்த வர்த்தகர் காப்பாரில் உள்ள தனது
வீட்டில் கடந்த வியாழக்கிழமை கொல்லப்பட்டார். பாராங் கத்தி மற்றும்
டேசர் கன் ஏந்திய கும்பல் ஒன்று அவரைத் தாக்கியதாக நம்பப்படுகிறது.
அந்த ஆடவரின் தலை, கால்கள், தோள்பட்டை மற்றும் வலது கையில்
பலத்தக் காயங்கள் காணப்பட்டன.


