NATIONAL

குண்டு வெடிப்பு எதிரொலி- மலேசிய-தாய். எல்லையில் கூடுதல் பாதுகாப்பு

29 ஏப்ரல் 2024, 8:44 AM
குண்டு வெடிப்பு எதிரொலி- மலேசிய-தாய். எல்லையில் கூடுதல் பாதுகாப்பு

கோத்தா பாரு, ஏப் 29- நராதிவாட் பிரதேசத்தில் சுங்கை கோலோக் மாவட்டத்திலுள்ள குவாலோசிரா, பெசோமாஸ் மாவட்டங்களில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தொடர்ந்து அரச மலேசிய போலீஸ் படை மலேசிய-தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது.

அதே சமயம், இந்த தாக்குதல் தொடர்பில் தாய்லாந்து காவல் துறையுடன் அரச மலேசிய போலீஸ் படை ஒத்துழைக்கும் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹூசேன் கூறினார்.

பாதுகாப்பை உறுதி செய்வதில் குறிப்பாக இரு நாட்டு எல்லை தொடர்பான விவகாரங்களில் தாய்லாந்து அதிகாரிகளுடன் அரச மலேசிய போலீஸ் படை அணுக்கமான நட்புறவை பேணி வருகிறது என்று அவர் சொன்னார்.

சம்பவம் நிகழ்ந்த மலேசிய எல்லைப் பகுதியில் வசிக்கும் பொது மக்களின் குறிப்பாக அங்கு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த வெடிகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து முழு தயார் நிலையில் இருக்கும்படி கிளந்தான், கெடா மற்றும் பேராக்  மாநில போலீஸ் தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் சொன்னார்.

இதனிடையே, 16 நிலைச்சாவடிகள் நெடுகிலும் நடந்தும் மோட்டார் சைக்கிள்கள் மூலமாகவும் ரோந்து நடவடிக்கையில் தங்களின் உறுப்பினர்கள் ஈடுபடவுள்ளதாகப் பி.ஜி.ஏ. எனப்படும் பொது தற்காப்பு படையின் தென்கிழக்கு பட்டாளத்தின் தளபதி எஸ்ஏசி ஷேக் அஸார் கூறினார்.

எல்லைப்புற நகரான ரந்தாவ் பாஞ்சாங்கையொட்டிய தாய்லாந்து பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனத் தாங்கள் சந்தேகிக்கப்பதாக அவர் சொன்னார்.

முன்னதாக, அந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தை சித்தரிக்கும் காட்சிகள் அடங்கிய காணொளிகளை அப்பகுதியில் உள்ள மக்கள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.