புத்ராஜெயா, ஏப் 29 - நாட்டில் உள்ள பல்வேறு இன மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் வகையில், ஹரி ராயா ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
பண்டிகைக் காலங்களில் திறந்த இல்ல உபசரிப்பு கலாச்சாரம் மலேசியாவில் தனித்தன்மை வாய்ந்த ஒன்றாகும் என அவர் தெரிவித்தார்.
“இந்தோனேசியாவில் ஒரு நாள் மட்டுமே ஐதில்பித்ரியைக் கொண்டாடுகிறார்கள் என அங்கு வசிக்கும் எனது நண்பர்கள் தெரிவித்தனர். ஆனால், மலேசியாவில் நாம் (1 மாதம்) 30 நாட்கள் கொண்டாடுகிறோம்.
“இந்த கொண்டாட்டம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது முக்கியமல்ல, வெவ்வேறு மதங்கள் மற்றும் கலாச்சார பின்னணிகளைக் கொண்ட பல்வேறு இன குழுக்களிடையே சமூக ஒருங்கிணைப்பு, தனித்துவமான தோழமை உணர்வுடன் எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதுதான் முக்கியம்,” என்று அவர் கூறினார்.
ஸ்ரீ சத்ரியாவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற ‘துணைப் பிரதமருடனான சந்துனன் காசிஹ் சியாவல்’ நிகழ்வின் போது பத்திரிகையாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
இந்த நிகழ்வுகள் தலைவர்கள் மக்களுடன் நட்புறவு கொள்வதற்கான ஒரு தளமாகவும் செயல்படுகின்றன என்று அவர் கூறினார்.
“எனது விருந்தினர்கள் புத்ராஜெயா மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து மட்டுமல்ல, நாடு முழுவதிலுமிருந்து வந்தவர்கள் ஆவர். உதாரணமாக, சபா மற்றும் சரவாக்கிலிருந்தும் நண்பர்கள் வந்தனர். ஏனென்றால், நாங்கள் ஒருவரையொருவர் நீண்ட காலமாக அறிந்திருக்கிறோம்.
"ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையில், எங்களுக்கு நாடு முழுவதும் கிளைகள் மற்றும் பிரிவுகள் உள்ளன, எனவே அவர்கள் இதன் மூலம், என்னைச் சந்திக்கும் வாய்ப்பைப் பயன்படுத்துகிறார்கள்,," என ஜாஹிட் கூறினார்.
மேலும், இந்த திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமர் துறையின் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ அஸலினா ஓத்மான், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணை அமைச்சர் டத்தோ ஆர். ரமணன், நிதியமைச்சர் II டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் மற்றும் அம்னோ செயலாளர்- ஜெனரல் டத்தோ அசிராஃப் வாஜ்டி டுசுகி ஆகியோர் கலந்து கொண்டனர்
- பெர்னாமா


