கோலாலம்பூர், ஏப் 29- மலேசிய அழகு ராணியான ஹர்வின் கவுரின் விடா
முயற்சியும் மனோதிடமும் ஏழு மாத காலத்தில் இரண்டாவது முறையாக
மேரா மலையுச்சியை அவர் அடைவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தியது.
எனினும், இச்சாதனையைப் படைக்கும் முயற்சியின் போது கடுமையான
உறைபனி காரணமாக அவர் தனது விரல்களில் ஒன்றை இழக்க
நேரிட்டது.
இமயமலைத் தொடரில் அமைந்துள்ள பிரமிப்பூட்டும் மலைகளில்
ஒன்றான மேரா சிகரம், கடல் மட்டத்திலிருந்து 6,470 அடி உயரத்தில்
உள்ளது. மிகுந்த அனுபவம் உள்ள மலையேறிகளுக்கு கூட இந்த சிகரம்
சவால்மிக்கதாக உள்ளது.
நாற்பத்து நான்கு வயதான அந்த அழகு ராணி, ஷெர்ப்பா எனப்படும்
வழிகாட்டியின் துணையுடன் இந்த துணிகரப் பயணத்தை மேற்கொண்டு
கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி மேரா சிகரம் அடைந்தார்.
ஆப்பிரிக்காவின் மிகவும் உயர்ந்த மலையான கிளிமஞ்சாரோவின்
உச்சியை அடைந்தன் மூலம் பெற்ற சாதனையின் தொடர்ச்சியாக
நேப்பாளத்தின் மேரா சிகரத்தை அவர் தொட்டார். 5,895 மீட்டர் உயரம்
கொண்ட இந்த கிளிமஞ்சாரோ சிகரத்தை அவர் கடந்தாண்டு செப்டம்பர்
மாதம் 24ஆம் தேதி அடைந்தார்.
எனினும், மேரா மலையுச்சியை அடைவது ஹர்வினுக்கு கடும்
சவால்மிக்கதாக இருந்தது. மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் குளிரில் உறை
பனியைக் கடந்து செல்வதில் அவர் பெரும் சிரமத்தை எதிர்நோக்கினார்.
உறை பனி காரணமாக அவர் தனது இடது கரத்தின் நடு விரலை இழக்க
நேரிட்டது.
இந்த மலையேறும் முயற்சியில் விரலை இழந்த போதிலும் மலையேறும்
முயற்சியைக் கைவிட ஹர்வின் கைவிடத் தயாராக இல்லை. எதிர்வரும் டிசம்பர் மாதம் மற்றொரு மலையில் ஏற தாம் தயாராகி வருவதாக அவர் சொன்னார்.
கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெற்ற மலேசிய
உலக திருமதி அழகு ராணிப் போட்டியில் அவர் அழகியாக மகுடம்
சூடினார்.


