NATIONAL

டீசல் பதுக்கல் கும்பலின் அச்சுறுத்தல் குறித்து அமைச்சிடம் புகார் செய்வீர்- பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்து

26 ஏப்ரல் 2024, 9:36 AM
டீசல் பதுக்கல் கும்பலின் அச்சுறுத்தல் குறித்து அமைச்சிடம் புகார் செய்வீர்- பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்து

கோலாலம்பூர், ஏப் 26- மானிய விலை  டீசலைப் பதுக்கும்  கும்பல்களால் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் செய்யுமாறு  அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அதன்  அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமது அலி கூறினார்.

தங்களுக்கும் தங்கள் ஊழியர்கள் அல்லது நிறுவனத்தின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என அஞ்சி புகார் அளிக்க பலர் மறுப்பதை தாங்கள் உணர்ந்துள்ளதாகக் கூறிய அவர், இத்தகையப் புகார்களை அமைச்சு பாதுகாப்பாக வைத்திருக்கும் என உறுதியளித்தார்.

நாங்கள் உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.  காவல்துறை அல்லது

அமைச்சிடம் புகார் அளியுங்கள்.  ஏனெனில் டீசல் கடத்தல்  அமலாக்கத்தையும் கைது நடவடிக்கைகளையும்  மேம்படுத்துவதே எங்கள் நோக்கம் என அவர் குறிப்பிட்டார்.

தேசிய அறிவுசார் சொத்துரிமை தின  கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று இங்கு நடத்தப்பட்ட   2024 ஆம் ஆண்டுக்கான தேசிய அறிவுசார் சொத்து விருதளிப்பு   நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர்  செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

முன்பு அதிகமாக இருந்த டீசல் கடத்தல் நடவடிக்கைகள்  தடுக்கப்பட வேண்டும். அந்நோக்கத்தை அடைய  நாங்கள் கூடுதலானத்  தகவல்களைப் பெற வேண்டியுள்ளது என்றார் அவர்.

சில பொறுப்பற்ற தரப்பினரின் டீசல் பதுக்கும் நடவடிக்கைகள் எரிபொருள் மானியம் வழங்குவதன் மூலம் மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளை கீழறுப்பு செய்வதால்  இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்குமாறு ஆர்மிசான் கேட்டுக் கொண்டார்.

அடிக்கடி வரும்  வாகனங்களுக்கு எரிபொருளை விற்பனை செய்ய அனுமதிக்காத பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் டீசல் பதுக்கல் கும்பலால் அச்சுறுத்தப்படுவார்கள் என்று அர்மிஸான் கூறிருந்ததாக ஊடகங்கள் கடந்த செவ்வாய்கிழமை செய்தி வெளியிட்டிருந்தன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.