மலாக்கா, ஏப் 23 - அரசியல் நிலைத்தன்மை மற்றும் தெளிவான
பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக உலகின் முக்கிய முதலீட்டு
இடமாக மலேசியா உருவாக்கம் கண்டு வருகிறது என்று பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இலக்கவியல் உருமாற்றம், எரிசக்தி மாற்ற இலக்குத் திட்டம்
(என்.டி.இ.ஆர்.) புதிய தொழிலியல் பெருந்திட்டம் 2030 (என்.ஐ.எம்.பி.)
போன்ற கொள்கைகள் மூலம் நாட்டின் ஆற்றலை முதலீட்டாளர்கள்
அறிந்து கொள்வதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது என்று அவர் சொன்னார்.
இன்ஃபினியென், என்விடியா போன்ற எண்ணற்ற முதலீடுகளை மலேசியா
ஈர்த்துள்ளது. நமக்குத் தேவைப்படும் 30,000 பொறியியலாளர்களை நம்மால்
நிரப்ப இயலவில்லை என்று அவர் தெரிவித்தார்.
ஆற்றலைப் பெருக்குவதற்காக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர்
அகமது ஜாஹிட் ஹமிடி தற்போது தீவிர கவனம் செலுத்தி வரும்
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் திவேட் (தொழில்நுட்பம் மற்றும்
தொழில் திறன் கல்வி) மீது மலாய் பெற்றோர்களும் பிள்ளைகளும்
கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.
நேற்றிரவு ஆயர் குரோவில் உள்ள மலாக்கா அனைத்துலக மாநாட்டு
மையத்தில் நடைபெற்ற 2024 மடாணி நோன்புப் பெருநாள் பொது
உபசரிப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அன்வார் இவ்வாறு
சொன்னார்.
இந்த நிகழ்வில் மலாக்கா ஆளுநர் துன் முகமது அலி ருஸ்தாம், அகமது
ஜாஹிட், மலாக்கா முதல்வர் டத்தோஸ்ரீ அப்துல் ராவுப் யூசோ
ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நாடு பல்வேறு நிலைகளில் தொடர்ந்து பின்தங்காமலிருப்பதை உறுதி
செய்ய அனைத்து நிலையிலான தரப்பினர் மத்தியிலும் சிந்தனை மாற்றம்
ஏற்படுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மக்கள் மத்தியில் சிந்தனை மாற்றம் ஏற்பட வேண்டும் என நான் பெரிதும்
விரும்புகிறேன். நாம் அடிப்படை விஷயங்களை விட்டு விட்டு சில்லறை
விஷயங்களுக்கு அடித்துக் கொண்டிருந்தால் பிற இனத்தினருக்கு
மத்தியில் மட்டுமின்றி வளர்ந்த நாடுகளுக்கு மத்தியிலும் நாம்
பின்தங்கியவர்களாகி விடுவோம் என்றார் அவர்.


