கோலாலம்பூர், ஏப் 23: எதிர்வரும் மே 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோல
குபு பாரு இடைத் தேர்தலில் முன்னிறுத்தப்படும் ஒற்றுமை அரசின் எந்த
வேட்பாளரையும் ஆதரிப்பதில் பாரிசான் நேஷனலுக்கு (தேசிய முன்னணி)
எந்த ஆட்சேபனையும் இல்லை.
ஒற்றுமை அரசிலுள்ள கட்சிகளின் பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில்
பக்கத்தான் ஹராப்பான், பாரிசான் நேஷனல் அல்லது இதர பங்காளிக்
கட்சிகளிலிருந்து வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவதாக அக்கூட்டணியின்
பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காடீர் கூறினார்.
புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை ஒற்றுமை அரசாங்கம் அடித்தளமாகக்
கொண்டுள்ளது. இந்த அடித்தளம் தொடர்ந்து கட்டிக்காக்கப்பட வேண்டும்
என அவர் வலியுறுத்தினார்.
அரசாங்கத்தில் நிலவும் ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வை பாதிக்கும்
வகையில் அறிக்கைகளை விடுவதை தவிர்ப்பதே தற்போது
முக்கியமானதாகும் என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
அனைத்து தரப்பினரும் அறிக்கைகளை விடுவதற்கு முன்னர் பல்வேறு
கோணங்களில் நன்கு யோசிக்க வேண்டும். அனைத்துப் பிரச்சனைகளும்
சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கிடையே தனிப்பட்ட முறையில் விவாதிக்கப்பட்டு தீர்க்கப்பட வேண்டும் என்றார் அவர்.
இந்த இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற
வாய்ப்பளிக்காது. மாறுபட்ட மற்றும் பொருத்தமான அணுகுமுறைகள்
மூலம் ஒற்றுமை அரசின் வேட்பாளர் வெற்றி பெறுவதை உறுதி செய்ய
அது பாடுபடும் என்று அவர் மேலும் சொன்னார்.
இந்த இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசின் வேட்பாளருக்கு பாரிசான்
நேஷனல் முழுமையாக ஆதரவளிக்கும் என்று அக்கூட்டணியின்
தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி கூறினார்.
தங்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ள பகுதிகளில் பிரசாரப் பணிகளை
மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் தேசிய முன்னணி ஈடுபடும்.
வாக்காளர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை முறையாக ஆற்றுவதை
உறுதி செய்வதையும் ஒற்றுமை அரசின் வேட்பாளரின் வெற்றியையும்
அது உறுதி செய்யும் என்றார் அவர்.


