கோலாலம்பூர், ஏப் 22 - எதிர்வரும் 2030ஆம் ஆண்டு வாக்கில் உலகளாவிய
தொடக்க நிறுவனங்களுக்கான சிறந்த சூழலைக் கொண்ட 20 நாடுகளில்
ஒன்றாக நாட்டை உருவாக்கவும் வட்டார இலக்கவியல் தொடக்க நிறுவன
மையமாகக் கோலாலம்பூரை முன்னிலைப்படுத்தவும் மலேசியா ஆர்வம்
கொண்டுள்ளது.
இதன் அடிப்படையில் இன்று தொடங்கி இரு தினங்களுக்கு நடைபெறும்
கேஎல்20 உச்சநிலை மாநாடு, உயர் மதிப்பிலான முதலீடுகளைக் கொண்ட
தொடக்க நிறுவனங்களுக்கு வழிகாட்டும் களமாக விளங்கும் என்று
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
முழுமையான உலகளாவிய அமைப்புச் சங்கிலியைப் பயன்படுத்தி
வெளிநாடுகளில் தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கு தொடக்க
நிறுவனங்களை இந்த ஆய்வரங்கு ஊக்குவிக்கும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட வெஞ்சர் கேப்பிட்டல் எனப்படும்
துணிகர மூலதன நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் கருத்து
பகிர்வை தாம் பெரிதும் வரவேற்பதாகவும் பிரதமர் சொன்னார்.
நாட்டின் தொலைநோக்கை உட்படுத்திய தெளிவான கொள்கை, போதுமான
நிதி வளம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளைக் கொண்ட தொடக்க
நிறுவனங்களை ஆதரிக்கும் அரசாங்கத்தின் கடப்பாட்டை நான் வலியுறுத்த
விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.
கேஎல்20 மாநாட்டையொட்டி நேற்றிரவு இங்கு நடைபெற்ற சிறப்பு இரவு
விருந்தில் கலந்து கொண்டப் பின்னர் தனது பேஸ்புக் பக்கத்தில்
வெளியிட்ட பதிவு ஒன்றில் அவர் இவ்வாறு கூறினார்.
தொழில்முனைவோரியல் மற்றும் புத்தாக்கத்திற்கான முதன்மை
மையமாக மலேசியாவை உருவாக்குவதற்கு ஏதுவாக தொடக்க நிறுவனங்களுக்கு உகந்த சூழலை உருவாக்கும் கடப்பாட்டை மடாணி அரசாங்கம் எப்போதும் கொண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.


