கோலாலம்பூர், ஏப் 22- உலு சிலாங்கூர் மற்றும் கோம்பாக் வட்டாரத்திலுள்ள 24 மணி நேர பல்பொருள் விற்பனை கடைகளில் கொள்ளையிட்டு வந்த கும்பலின் நடவடிக்கையை போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
கேங் ஆயோய் எனும் கும்பலின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் அந்த மூவரையும் கைது செய்ததன் மூலம் தொடர் கொள்ளைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டுள்ளதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் அகமது ஃபைசால் தாஹ்ரின் கூறினார்.
நேற்று விடியற்காலை 3.00 மணியளவில் குவாங்கில் உள்ள ஒரு வீட்டில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில் 23 முதல் 32 வயது வரையிலான அம்மூவரும் கைது செய்யப் பட்டதாக அவர் சொன்னார்.
அக்கும்பலிடமிருந்து ஹோண்டா ஆர்.எஸ்.எக்ஸ் ரக மோட்டார் சைக்கிள், கவசத் தொப்பி, கருப்பு நிறச் சட்டை மற்றும் ஒரு ஜோடி காலணி கைப்பற்றப்பட்டதாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
கைதான மூவரும் போதைப் பொருள் தொடர்பான முந்தைய குற்றப் பதிவுகளைக் கொண்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் சோதனையில் மெத்தம்பெத்தமின் மற்றும் டெட்ராட்ரேகேனாபினோல் போதைப் பொருளை ஆட்கொண்டிருந்தது தெரியவந்தது என்றார் அவர்.
இந்த மூவரையும் கைது செய்ததன் மூலம் உலு சிலாங்கூர் மற்றும் கோம்பாக் வட்டாரத்தில் நிகழ்ந்த ஒன்பது கொள்ளைச் சம்பவங்களுக்கு தீர்வு காணப் பட்டுள்தாக நாங்கள் நம்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.
தண்டனைச் சட்டத்தின் 395 மற்றும் 397 பிரிவுகளின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக அம்மூவரும் நேற்று தொடங்கி ஆறு நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.


