கோலாலம்பூர், ஏப் 22- கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின்
முதலாவது முனையத்தில் கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை தனது
எஜமானரைக் காப்பாற்றும் முயற்சியின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு
இலக்கான மெக்காப்பாளருக்கு நேற்று நினைவு திரும்பியது.
தற்போது சைபர் ஜெயா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும்
முகமது நுர் ஹடிட் ஜைனி (வயது 38) என்ற அவ்வாடவர் உடல் நலம்
தேறி வருவதாக அவரின் மனைவி சித்தி நோராய்டா ஹசான் (வயது 38)
கூறினார்.
என் கணவருக்கு சுயநினைவு திரும்பி விட்டது. மருத்துவர்கள் சுவாசக்
கருவிகளை அகற்றி விட்டனர். அவரால் ஓரளவு பேச முடிகிறது என்று
அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
கடந்த 14ஆம் தேதி விடியற்காலை 1.30 மணியளவில் நிகழ்ந்த
அச்சம்பவத்தில் முகமது நுர் அடிட் காயமடைந்தார். தனது எஜமானரின்
கணவரான சந்தேகப் பேர்வழி தன் மனைவியை நோக்கி கிளப்பிய இரு
வேட்டுகளில் ஒன்று அவரைத் தாக்கியது.
முப்பத்தெட்டு வயதான அந்த சந்தேகப் பேர்வழி கோத்தா பாருவில்
சம்பவம் நிகழ்ந்த மறுநாள் அதாவது ஏப்ரல் 15ஆம் தேதி கைது
செய்யப்பட்டார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு
உதவுவதற்காக அந்த ஆடவரை இம்மாதம் 16 முதல் 22 வரை தடுப்புக்
காவலில் வைப்பதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியுள்ளது.


