கோத்தா பாரு, ஏப் 22 - மெத்தாம்பெத்தமின், ஹெரோயின் போதைப் பொருளைக் கடத்தியது மற்றும் துப்பாக்கி வைத்திருந்து தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளிலிருந்து கால்நடைப் பண்ணை உரிமையாளரையும் அவரது உதவியாளரையும் இங்குள்ள உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டிலிருந்தும் வழக்கிலிருந்தும் விடுவித்தது.
பிரசிகியூஷன் வழக்கின் முடிவில் அவ்விருவருக்கும் எதிரான குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரம் இருப்பதை அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறியதைக் கண்டறிந்த பின்னர் வான் மர்ஸூக்கி வான் டாட் (வயது 59) மற்றும் நைம் அஸ்மி (வயது 37) ஆகிய இருவரையும் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பதாக நீதிபதி டத்தோ முகமது அபாசாஃப்ரி முகமது அப்பாஸ் தனது தீர்ப்பில் கூறினார்.
இந்த தீர்ப்பை வழங்கும் முன் டி.என்.ஏ. வீட்டின் சாவிகள், மர்ஸூகி வாடகைக்கு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் உரிமை உள்ளிட்ட பல விஷயங்களை தாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதாக அவர் கூறினார்.
பல்வேறு டி.என்.ஏ. மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் போதைப் பொருள் மற்றும் துப்பாக்கியில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் டி.என்.ஏ. காணப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
எனவே, குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் எதிர்வாதம் செய்ய அழைக்காமலேயே நீதிமன்றம் விடுதலை செய்கிறது என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
முதல் மற்றும் இரண்டாவது குற்றச்சாட்டுகளின்படி, கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி பின்னிரவு 12.50 மணிக்கு மஹாங், தாமான் பிங்கிரான் அதிரா 3 இல் உள்ள ஒரு வீட்டில் 749.5 கிராம் மெத்தம்பெட்டமின் மற்றும் 87.8 கிராம் ஹெராயின் கடத்தியதாக அவர்கள் கூட்டாக குற்றம் சாட்டப்பட்டனர்.
1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39B (2) இன் கீழ் தண்டனை விதிக்க வகை செய்யும் அபாயகர போதைப் பொருள் சட்டப் பிரிவு 39B (1) (a) இன் கீழ் அவ்விருவரும் குற்றச்சாட்டை எதிநோக்கியிருந்தனர்.
இச்சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் 15 பிரம்படி வழங்கப்படும்.
அதே சமயத்தில், அதே இடத்தில், மற்றும் தேதியில் கைத்துப்பாக்கி வைத்திருந்ததாகவும் அவர்கள் கூட்டாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.


