கோலா சிலாங்கூர், ஏப் 22 - விரைவில் நடைபெறவிருக்கும் கோல குபு பாரு இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்கம் முன்னிலைப்படுத்தும் வேட்பாளரை மலாய் வாக்காளர்கள் ஆதரிப்பதை உறுதி செய்ய பார்ட்டி அமானா நெகாரா கட்சி சொந்த வியூகத்தைக் கொண்டுள்ளது என்று கட்சியின் வியூக இயக்குநர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கூறினார்.
எனினும், அந்த வியூகத்தை வெளிப்படுத்தாத அவர், ஒற்றுமை அரசாங்கத்திலுள்ள கட்சிகளின் தேர்தல் இயந்திரத்தின் ஒத்துழைப்பு மற்றும் முறைப்படுத்தப்பட்ட முயற்சியின் மூலம் வெற்றியை அடைய முடியும் என்றார்.
ஒற்றுமை அரசாங்கக் கட்சிகளின் முழு இயந்திரத்தையும் அணிதிரட்டுவதன் மூலமாகவும் ஒற்றுமை அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட அமைதி மற்றும் நல்லிணக்கப் போக்கை ஊக்குவிப்பதன் வாயிலாகவும் வரவிருக்கும் இடைத்தேர்தலில் மக்கள் இந்த மனப் போக்கை நிலைநிறுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன் என்று அவர் சொன்னார்.
நேற்று இங்கு நடைபெற்ற கோல சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியின் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்புக்குப் பின்னர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள ஒவ்வொரு கட்சியும் முன்னிலைப்படுத்தப்படும் வேட்பாளரின் வெற்றியை உறுதிப்படுத்த முழு ஆதரவை வழங்க வேண்டும் சுகாதார அமைச்சருமான அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த இடைத்தேர்தல் முடிவு தெளிவான ஒரு சமிக்ஞையை அனுப்ப வேண்டும். தேசத்தை முன்னேற்றுவதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் ஒற்றுமை அரசாங்கத்தின் தலைமை மீதான நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
வரும் மே 11ஆம் தேதி இந்த இடைத்தேர்தலுக்கான வாக்களிப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 27ஆம் தேதியும் தொடக்கக் கட்ட வாக்களிப்பு மே 7ஆம் தேதியும் நடைபெறும்.
ஜசெக பிரதிநிதியான லீ கீ ஹியோங் புற்று நோய் காரணமாக கடந்த மார்ச் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. 58 வயதான லீ, கடந்த 2013 முதல் மூன்று தவணைகளாக கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார்.
கடந்த 2022 இல் நடைபெற்ற நாட்டின் 15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் ஏழாவது இடைத் தேர்தல் தேர்தல் இதுவாகும்.
கோல குபு பாரு இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் மொத்தம் 40,226 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். 39,362 வழக்கமான வாக்காளர்கள், 625 போலீஸ்காரர்கள், 238 ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் மனைவிகள் ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.


