பாலிக் பூலாவ், ஏப் 19- மேம்பாலத்திலிருந்து சுமார் 30 மீட்டர்
தூக்கியெறியப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பலத்தக்
காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இத்துயரச்
சம்பவம் பாயான் லெப்பாஸ், ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா
சாலையின் சுங்கை திராம் மேம்பாலத்தில் நேற்று மாலை நிகழ்ந்தது.
இருபத்தேழு வயதுடைய அந்த மோட்டார் சைக்கிளோட்டி நேற்று மாலை
4.10 அளவில் பாயான் பாருவிலிருந்து பாயான் லெப்பாசில் உள்ள தனது
வீட்டிற்குத் தனியாகப் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து
நிகழ்ந்ததாகப் போலீஸ் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
அந்த மேம்பாலத்தை அடைந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்
சைக்கிள் சாலையின் தடுப்பை உரசியதைத் தொடர்ந்து அந்த இளைஞர்
மேம்பாலத்திலிருந்து கீழே தூக்கியெறியப்பட்டதாக அவர் சொன்னார்.
தலையில் பலத்தக் காயங்களுக்குள்ளான அந்த இளைஞர் உடனடியாக
பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை
பலனின்றி நேற்றிரவு 9.45 மணியளவில் அவர் உயிரிழந்தார் என அவர்
சொன்னார்.
இதனிடையே இந்த விபத்து நிகழ்ந்ததை உறுதிப்படுத்திய பாராட் டாயா
மாவட்ட போலீஸ் தலைவர் டி.எஸ்.பி. ஜெப்ரி முகமது ஜெய்ன்
இச்சம்பவம் தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச்
சட்டத்தின் 41(1) வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு
வருகிறது என்றார்.


