கோலாலம்பூர், ஏப் 19- வானிலையில் காணப்படும் மேம்பாடு காரணமாக
சபா, சரவா மற்றும் லபுவானுக்கான மலேசியன் ஏர்லைன்ஸ்
நிறுவனத்தின் விமானச் சேவை நேற்று தொடங்கி கட்டங் கட்டமாக
வழக்க நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.
இந்தோனேசியாவின் குனோங் ருவாங் எரிமலை வெடிப்பு காரணமாக
விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டப் பின்னர் காணப்பட்டுள்ள
நேர்மறையான மேம்பாடு இதுவாகும் என்று அந்நிறுவனம் தனது
பேஸ்புக்கில் வெளியிட்ட சமீபத்திய பதிவில் கூறியுள்ளது.
விமானச் சேவையை கூடிய விரைவில் வழக்க நிலைக்குக் கொண்டு
வருவதற்கான முயற்சியில் மலேசியன் ஏர்லைன்ஸ் ஈடுபட்டு வரும்
அதேவேளையில் வானிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று
திட்டமிடப்பட்ட சில சேவைகளை ரத்து செய்துள்ளது.
விமானச் சேவையில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் சமூக ஊடகங்கள்
வாயிலாக ஆகக்கடைசி நிலவரங்களை தாங்கள் வெளியிடும்
அதேவேளையில் சம்பந்தப்பட்ட பயணிகளை நேரடியாகத் தொடர்பு
கொண்டும் தகவல்களைத் தெரிவிக்கவுள்ளதாக அது குறிப்பிட்டது.
எரிமலை வெடிப்பு காரணமாக கோலாலம்பூர் அனைத்துலக விமான
நிலையத்திற்கும் சபா மற்றும் சவராவுக்கும் இடையிலான 19 பயணச்
சேவைகளை மலேசியன் ஏர்லைன்ஸ் நேற்று ரத்து செய்தது.
பாதிக்கப்பட்ட பயணிகள் மாற்றுப் பயண அட்டவணையில் இலவசமாக
பயணம் மேற்கொள்வதற்கு அல்லது கட்டணத்தை திரும்ப ப் பெறுவதற்கு
தாங்கள் வாய்ப்பினை வழங்குவதாக அந்நிறுவனம் நேற்றிரவு அறிவித்தது.


