பாங்கி, ஏப் 19- பெரேனாங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது ஆறு மாதக் குழந்தையைப் படுகொலை செய்ததாகப் பாதுகாவலர் ஒருவருக்கு எதிராக இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் நுர்டியானா முகமது நவாவி முன்னிலையில் தனக்கு எதிராக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அதனைப் புரிந்து கொண்டதற்கு அடையாளமாக முகமது அய்ஸாட் சாமின் (வயது 25) என்ற அந்த ஆடவர் தலையை அசைத்தார்.
கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தில் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.
இம்மாதம் 14ஆம் தேதி இரவு 8.00 மணிக்கும் மறுநாள் காலை 7.40 மணிக்கும் இடையே பெரோனோங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது குழந்தையான முகமது அய்ஸார் வில்டானை படுகொலை செய்ததாக இரு பிள்ளைகளுக்குத் தந்தையான முகமது அய்ஸாட் மீது குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது.
குற்றவாளி என நிரூபிக்க பட்டால் கட்டாய மரணத் தண்டனை, மரண தண்டனை விதிக்கப் படாத பட்சத்தில் 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் 12 க்கும் குறையாத பிரம்படி வழங்க வகை செய்யும் தண்டனைச் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளார்.
தடயவியல்,இரசாயன மற்றும் சவப் பரிசோதனை அறிக்கைளைப் பெறுவதற்கு ஏதுவாக இந்த வழக்கிற்கான புதிய தேதியை நிர்ணயிக்கும்படி அரசுத் தரப்பு வழக்கறிஞர் சித்தி நுர் இல்யானா முகமது சுலைமான் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் அனுமதி மறுத்த மாஜிஸ்திரேட் இவ்வழக்கின் மறு விசாரணை வரும் மே 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


