கோத்தா பாரு, ஏப் 16- கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (கே.எல்.ஐ.ஏ.) முதலாவது முனையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை விசாரணைக்காக ஏழு நாட்கள் தடுத்து வைப்பதற்கான அனுமதியை இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று வழங்கியது.
முப்பத்தெட்டு வயதான அந்த சந்தேக நபரை 1971 ஆம் ஆண்டு சுடும் ஆயுதச் சட்டத்தின் (கடும் தண்டனை) 8வது பிரிவு மற்றும் 1960ஆம் ஆண்டு சுடும் ஆயுதச் சட்டத்தின் 8வது பிரிவின் கீழ் எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கான அனுமதியை மாஜிஸ்திரேட் ராஸ் இம்ரான் ஹமிட் வழங்கினார்.
முன்னதாக, லோக்அப் சட்டை அணிந்திருந்த சந்தேக நபர் போலீசாரின் பலத்தக் காவலுடன் காலை 8.25 மணியளவில் நீதிமன்றம் வந்தார்.
அந்த சந்தேக நபர் கிளந்தான் குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (டி9) தனியார் மருத்துவமனைக்கு முன்புறம் நேற்று கைது செய்யப்பட்டார்
தேடப்பட்டு வந்த அந்த சந்தேக நபர் குறிப்பிட்ட ஒரு இடத்தில் நேற்று மாலை 3.00 மணியளவில் கைது செய்யப்பட்டதை டான்ஸ்ரீ ரஸாருடின் ஹூசேன் நேற்று உறுதிப்படுத்தினார்.
நேற்று முன்தினம் அதிகாலை 1.20 மணியளவில் விமான நிலைய நுழைவாயிலில் ஆடவர் ஒருவர் தன் மனைவியை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டார். ஒரு தோட்டா குறி தவறிய வேளையில் மற்றொரு தோட்டா அவரது மெய்க்காப்பாளரின் வயிற்றைத் தாக்கியது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அந்த மெய்ப்பாதுகாவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக ஹஃபிசுல் ஹராவி (வயது 38) என்ற நபரை தாங்கள் தேடி வருவதாகப் போலீசார் முன்பு கூறியிருந்தனர்.


