குவாந்தான், ஏப் 16- இங்குள்ள சுங்கை ஈசாப்பில் அமைந்துள்ள துரித
உணவு விற்பனை மையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வாடிக்கையாளர்
ஒருவரை அச்சுறுத்தியது மற்றும் அவருக்கு எதிராக சினமூட்டும்
நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பில் அரசாங்க ஊழியர் மற்றும்
வணிகர் உள்பட ஐவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இருபத்தேழு முதல் 43 வயது வரையிலான அந்த ஐவரும் கடந்த சனி
மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கைது செய்யப்பட்டதாகக் குவாந்தான்
மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமது ஜஹாரி புசு கூறினார்.
கைதான சில நபர்கள் போதைப் பொருள் உள்ளிட்ட குற்றப்பதிவுகளைக்
கொண்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குற்றவியல் சட்டத்தின் 506வது பிரிவின் கீழ் மேற்கொள்ளபட்டு வரும்
விசாரணைக்கு உதவுவதற்காக அவர்கள் அனைவரும் எதிர்வரும் 17ஆம் தேதி
வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் பெர்னாமாவிடம்
தெரிவித்தார்.
அந்த துரித உணவு விற்பனை மையத்திற்கு எதிராக புறக்கணிப்பு
பிரசாரத்தில் ஈடுபட்டு வரும்ம ஆடவர்கள் சிலர் கடந்த வெள்ளிக்கிழமை
இரவு 10.25 மணியளவில் பாதிக்கப்பட்ட நபரை அழைத்து கடுமையான
வார்த்தைகளில் திட்டியதோடு சினமூட்டும் வகையிலும் நடந்து
கொண்டதாக வான் முகமது ஜஹாரி முன்னதாகக் கூறியிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் அந்த ஆடவர் கடந்த சனிக்கிழமை போலீசில்
புகார் செய்தார்.


