உலு சிலாங்கூர், ஏப் 15: சிலாங்கூர் மாநிலத்தில் அனைத்து மக்களின் நல்வாழ்வையும் உறுதி செய்யும் வகையில் நேர்மையான மற்றும் அக்கறையுள்ள நிர்வாகத்தைத் தொடர மாநில அரசு உறுதியாக உள்ளது.
சிலாங்கூரின் விரைவான வளர்ச்சியில் யாரும் பின்தங்கி விடக்கூடாது என்பதில் தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்துத் தலைவர்களும் உறுதியுடன் இருக்கின்றனர் என டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
“நமது அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. இந்த வளர்ச்சியை நாங்கள் ஒன்றாகத் தொடர விரும்புகிறோம்.
“சில கட்சிகள் நடத்தும் அரசியல் சித்து விளையாட்டுகளில் மயங்கி விடாதீர்கள்.விரைவில் தேர்தல் பிரசாரம் வருவதால் கவனமாக இருக்க வேண்டும், பிரச்சாரத்தின் போது உரைகள் அல்லது பலவிதமான கருத்துக்களை கேட்பது சில சமயங்களில் நம்மை திசை திரும்ப வாய்ப்புண்டு
"நம்முடைய பகுத்தறிவை இழக்க வைப்பதோடு, தேவையற்ற கோபத்தை உண்டாக்கி, மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுக்கலாம்" என்று அவர் நேற்று கோலா குபு பாருவில் உள்ள கம்போங் அம்பாங் பிச்சாவில் நடந்த ஐடில்பித்ரி விருந்தில் உரையாற்றும் போது இவ்வாறு கூறினார்.
செயல்படுத்தப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலைத் தொடர, மாநில அரசுத் தலைமையின் விருப்பமும் உறுதியும் எப்போதும் நிலையானது என்று அமிருடின் கூறினார்.


