ஷா ஆலம், ஏப் 15-பண்டிகைக் காலங்களில் நீர் விநியோகத் தடைகளைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக நோன்புப் பெருநாளை முன்னிட்டு திறந்த இல்ல உபசரிப்பை ஏற்பாடு செய்ய விரும்பும் பொது மக்கள் சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (லுவாஸ்) வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பொது உபசரிப்புகளை நடத்துபவர்கள் நீர் விநியோகத்தில் இடையூறு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் திரவ அல்லது திடக் கழிவுகளை முறையாக மேலாண்மை செய்ய வேண்டும் அந்த வாரியம் கேட்டுக் கொண்டது.
மாசுபாட்டைத் தடுக்கும் நடவடிக்கையாக உணவுக் கழிவுகள் மற்றும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு ஊராட்சி மன்றங்களால் ஒதுக்கப்பட்ட பிரத்தியேக குப்பை அகற்றும் மையங்களில் கொட்டப்படுவதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், உணவுக் கழிவுகள் மற்றும் குப்பைகளை ஆற்றில் கொட்டுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இது ஆற்று நீரில் மாசுபாட்டை ஏற்படுத்தும் என்பதோடு பண்டிகை காலங்களில் நீர் விநியோக தடை ஏற்படுவதற்கும் வழிவகுக்கும் என்று லுவாஸ் தனது முகநூல் பதிவில் கூறியது.
பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை கால்வாய்களில் கொட்டுவதை தவிர்த்து அவற்றை சேகரித்து மறுசுழற்சி மையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அது ஆலோசனை கூறியது.
நீர் ஆதாரங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சந்தேகத்திற்கிடமான செயல்களை கண்டால் 03-55111800 அல்லது 0192647904 (புலனம்) மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று லுவாஸ் கூறியது.


