கோத்தா பாரு, ஏப் 14: ஏப்ரல் 4 முதல் எட்டு நாட்களில் வெப்பமான வானிலை அல்லது எரிப்பு காரணமாக 232 திறந்த வெளி தீ சம்பவங்களைக் கிளந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பதிவு செய்துள்ளது.

பாசிர் புத்தேவில் 12 இடங்களும், பச்சோக்கில் 8 இடங்களும், பாசிர் மாஸ், கோத்தா பாரு மற்றும் குவா முசாங்கில் தலா 6 இடங்களும் என சம்பந்தப்பட்ட 38 திறந்தவெளி தீ ஹாட்ஸ்பாட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என கிளந்தான் தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் உதவி இயக்குனர் முகமட் வில்டன் அஸ்ஹாரி கூறினார்.

கடந்த ஜனவரியில் தொடங்கி நான்கு மாதங்களில் ஒட்டுமொத்தமாக தீயணைப்புப் பிரிவினருக்கு 752 திறந்தவெளி தீ சம்பவங்கள் பற்றிய அறிக்கைகள் கிடைத்துள்ளதாகவும், ஒப்பீட்டளவில் அதிக எண்ணிக்கையில் கடந்த ஆண்டு முழுவதும் கிளந்தனில் 814 திறந்தவெளி தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும் அவர் கூறினார்.

"திறந்தவெளி தீ சம்பவங்கள் பற்றி தீயணைப்பு வீரர்கள் ஒவ்வொரு நாளும் அவசர அழைப்புகளைப் பெறுகிறார்கள்," என்று அவர் இன்று கூறினார்.

இந்த சிக்கலைக் குறைப்பதற்காக, தனது தரப்பு அடிக்கடி ரோந்துகளை நடத்துகிறது மற்றும் திறந்தவெளி தீ சம்பவங்கள் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு ஆலோசனை சேவைகளை வழங்குகிறது. அத்துடன் பணி நோக்கங்களுக்காக உறுப்பினர்களின் விடுப்பைக் கட்டுப்படுத்துகிறது என்றார்.

– பெர்னாமா