NATIONAL

கே.எல்.ஐ.ஏ. துப்பாக்கிச் சூடு - சந்தேகப் பேர்வழியின் புகைப்படம் நாட்டின் எல்லைப் பகுதிகளில் விநியோகம்

15 ஏப்ரல் 2024, 2:13 AM
கே.எல்.ஐ.ஏ. துப்பாக்கிச் சூடு - சந்தேகப் பேர்வழியின் புகைப்படம் நாட்டின் எல்லைப் பகுதிகளில் விநியோகம்

கோலாலம்பூர், ஏப் 15 - கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின்

முதலாவது முனையத்தில் (கே.எல்.ஐ.ஏ.) நேற்று நிகழ்ந்த துப்பாக்கிச்

சூட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகப் பேர்வழியின் புகைப்படம்

நாட்டின் வட பகுதியில் உள்ள நுழைவாயில்கள் மற்றும் அந்நிய நாட்டு

அதிகாரிகளிடம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

மெய்க்காப்பாளர் ஒருவர் படுகாயமடைவதற்குக் காரணமான

அச்சம்பவத்தில் தொடர்புடைய அந்த சந்தேக நபர் அடையாளம்

காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தேசிய

போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹூசேன் கூறினார்.

ஹபிஸூல் ஹராவி (வயது 38) என்ற அந்த நபர் எல்லையில் உள்ள

குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி அண்டை நாட்டிற்குள் நுழைந்து

விடாமலிருப்பதை உறுதி செய்ய அப்பாதைகள் மீது அதிகாரிகள் தீவிர

கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.

அந்த சந்தேகப் பேர்வழி இன்னும் நாட்டிற்குள் இருப்பதாக தாங்கள்

சந்தேகிப்பதாகக் கூறிய அவர், அவரை தேடிக் கண்டுபிடிக்கும் பணி

தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

எனது உறுப்பினர்களின் ஆற்றல் மீது நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

ஹபிஸூல் விரைவில் பிடிபடுவார் என பெர்னாமாவிடம் அவர்

குறிப்பிட்டார்.

இந்த தாக்குதலின் போது அந்த ஆடவர் 9 மில்லி மீட்டர் பகுதி தானியங்கி

கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தியது தொடக்கக் கட்ட விசாரணையில்

தெரியவந்துள்ளது என்றும் ரஸாருடின் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் இரு தோட்டா உறைகளை நாங்கள் கண்டு பிடித்தோம்.

அவற்றில் ஒன்று வெடிக்கவில்லை. அந்த துப்பாக்கியை அந்நபர் அண்டை நாட்டிலிருந்து பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என அவர் சொன்னார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.