கோல திரங்கானு, ஏப் 9- விவாகரத்து கேட்டதால் சினமடைந்த கணவர் மனைவியை பாராங் கத்தியால் வெட்டிக் காயப்படுத்தினார். இச்சம்பவம் டுங்குன், கெதெங்கா ஜெயாவில் நேற்று முன்தினம் இரவு 10.00 மணியளவில் நிகழ்ந்தது.
நிரந்தர வசிப்பிடத் தகுதியைக் கொண்ட 64 வயது ஆடவருக்கும் உள்நாட்டைச் சேர்ந்த 39 வயது பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தின் விளைவாக இந்த தாக்குதல் நிகழ்ந்ததாக டுங்குன் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் மைசூரா அப்துல் காடீர் கூறினார்.
அந்த பெண் சந்தேகப் பேர்வழி இடம் விவாகரத்து கேட்டதால் இந்த வாக்குவாதம் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது என்று அவர் பெர்னாமா தொடர்பு கொண்ட போது தெரிவித்தார்.
மனைவியின் இந்த கோரிக்கையினால் சினமடைந்த அவ்வாடவர் பாராங் கத்தி என நம்பப்படும் ஆயுதத்தைக் கொண்டு அப்பெண்ணின் தலையில் தாக்கியதாக அவர் குறிப்பிட்டார்.
டுங்கு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அப்பெண் பின்னர் மேல் சிகிச்சைக்காக சுல்தானா நுர் ஜஹிரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றார் அவர்.
பள்ளி ஒன்றின் சிற்றுண்டிச் சாலையில் சமையல்காரராக பணிபுரியும் அந்த மாதுவுக்கு தலையிலும் நெற்றியிலும் 10 தையல்கள் போடப்பட்டன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டத்தின் 326வது பிரிவின் கீழ் விசாரணைக்காக அந்த சந்தேக நபரைத் தாங்கள் தேடி வருவதாக அவர் சொன்னார்.


