ஈப்போ, ஏப் 9: நேற்று தாமான் சைகாட்டில் உள்ள குயிங் சின் லிங் ஓய்வு மற்றும் கலாச்சார கிராமத்தில் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் பாறை விழுந்து உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து பொதுமக்களிடமிருந்து காலை 11.30 மணியளவில் தகவல் கிடைத்தது என ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அபாங் சைனால் அபிடின் அபாங் அஹ்மட் கூறினார்.
சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட 44 வயதான நபர் வியட்நாமிலிருந்து ஈப்போவுக்கு வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்றது கண்டறியப்பட்டது.
"சம்பவ இடத்தில், கல் விழுந்து அந்நபரின் தலையில் மோதியது. இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்," என்று அபாங் சைனால் அபிடின் கூறினார்.
பாறை மோதியதில் தலையில் ஏற்பட்ட காயம்தான் மரணத்திற்குக் காரணம் என்று ராஜா பெர்மைசூரி மருத்துவமனை பைனுன் ஈப்போவின் மருத்துவ தடயவியல் பரிசோதனையின் முடிவுகள் காட்டின என்று அபாங் ஜைனல் அபிடின் கூறினார்.
"இறந்தவரின் உடலை மேலும் ஆய்வு செய்ததில், குற்றத்திற்கான எந்த தடயமும் கண்டுபிடிக்கப்படவில்லை. வழக்கு திடீர் மரணம் (எஸ்டிஆர்) என வகைப்படுத்தப்பட்டுள்ளது," என அவர் கூறினார்.
இவ்வழக்கு பற்றிய தகவல் தெரிந்தவர்கள், ஈப்போ மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தை (DCC) 05-2542222 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– பெர்னாமா


