NATIONAL

ஓப்ஸ் ஹாரி ராயா‘- பயணச் சேவையில் ஈடுபடுவதிலிருந்து 42 பேருந்துகளுக்கு ஜே.பி.ஜே. தடை

9 ஏப்ரல் 2024, 3:56 AM
ஓப்ஸ் ஹாரி ராயா‘- பயணச் சேவையில் ஈடுபடுவதிலிருந்து 42 பேருந்துகளுக்கு ஜே.பி.ஜே. தடை

கோலாலம்பூர், ஏப் 9- இம்மாதம் முதல் தேதி தொடங்கி நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘2024 ஓப்ஸ் ஹாரி ராயா ஐடில்பித்ரி‘ சாலை பாதுகாப்பு இயக்கத்தின் போது பல்வேறு தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக 42 பேருந்துகளை சேவையில் ஈடுபடுவதிலிருந்து தடை விதிப்பதற்கான உத்தரவை சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 54 பஸ் டெப்போக்கள் மற்றும் 28 பஸ் முனையங்களில் 3,799 பஸ்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அந்த 42 பஸ்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று ஜே.பி.ஜே. அமலாக்கத் துறையின் மூத்த இயக்குநர் டத்தோ லோக்மான் ஜெமான் கூறினார்.

சம்பந்தப்பட்ட அந்த பஸ்கள் தொழில்நுட்பம் தொடர்பான பல கடுமையான குற்றங்களைப் புரிந்துள்ளன. ஆகவே, பயணச் சேவையை மேற்கொள்ள அந்த பஸ்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று இங்குள்ள செலாத்தான் ஒருங்கிணைந்த பஸ் முனையத்தில் சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இது தவிர, மேலும் 77 பேருந்துகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. வாகனமோட்டும் தகுதி லைசென்ஸ் (சி.டி.எல்.) இல்லாதது, இரண்டாவது ஓட்டுநரைக் கொண்டிராதது மற்றும் பஸ்சை செலுத்தும் போது கைப்பேசியைப் பயன்படுத்தியது போன்ற காரணங்களுக்காக 47 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன என்றும் அவர் சொன்னார்.

இதனிடையே, தடை செய்யப்பட்ட போதை வஸ்துகளைப் பயன்படுத்திய குற்றத்திற்காகக் கெடா, சரவா, கிளந்தான் மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆறு பேருக்குப் பேருந்துகளை ஒட்டுவதிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜே.பி.ஜே. அதிகாரிகள் பயணிகள் வேடத்தில் 84 முறை பஸ்களில் பயணம் செய்துள்ள வேளையில் இந்த நடவடிக்கையின் மூலம் பஸ் ஓட்டுநர்கள் புரிந்த குற்றங்கள் தொடர்பில் 62 புகார்கள் பதிவு செய்யப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.