உலு சிலாங்கூர், ஏப் 8 - அடுத்த மாதம் நடைபெற இருக்கும் இடைத் தேர்தலில் கோல குபு பாரு தொகுதியை வெல்வோம் என கனவு காண வேண்டாம் என பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு உலு சிலாங்கூர் கெஅடிலான் தலைவர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் நினைவூட்டியுள்ளார்.
கோல குபு பாரு தொகுதியில் யார் போட்டி போடுவதையும் பக்கத்தான் ஹராப்பான் வரவேற்கிறது. சில இந்தியத் தலைவர்கள் பெரிக்கத்தான் நேஷனலுடன் குறிப்பாகப் பாஸ் கட்சியுடன் ஒத்துழைப்பை காண்கிறோம்.
அவர்களுக்கு நான் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். கோல குபு பாரு தொகுதியைக் கைப்பற்றலாம் என கனவு காணாதீர்கள். மறைந்த சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங்கின் சாதனைகள் இத்தொகுதியில் வெற்றியைத் தீர்மானிக்கும் அளவுகோலாக விளங்கும் என்று மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் அவர் சொன்னார்.
மாநில அரசின் அளப்பரிய சேவைகள் மற்றும் அடைவு பக்கத்தான் ஹராப்பான் இந்த தொகுதியை தக்க வைத்துக் கொள்வதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தும் எனத் தாம் நம்புவதாகவும் பிரகாஷ் குறிப்பிட்டார்.
கடந்த மூன்று தவணைகளாக ஜசெக வெற்றி பெற்ற கோல குபு பாரு தொகுதியைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பு தங்களுக்கு பிரகாசமாக உள்ளதாக பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹசான் கூறியிருந்தது தொடர்பில் சத்திய பிரகாஷ் இவ்வாறு கருத்துரைத்தார்.
கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி உறுப்பினரான லீ (வயது 58) புற்றுநோய்க் காரணமாகக் கடந்த மாதம் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
ஜசெகவைச் சேர்ந்த லீ கடந்த 2013ஆம் ஆண்டு முதல் மூன்று தவணைகளாக கோல குபு பாரு தொகுதியில் வெற்றி பெற்று வந்துள்ளார். இத்தொகுதி உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளது.
இத்தொகுதியில் எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் நடைபெறவுள்ள வேளையில் முதல் கட்ட வாக்களிப்பு மே 7 ஆம் தேதியும் தேர்தல் மே 11 ஆம் தேதியும் நடைபெறும்.
மொத்தம் 40,226 வாக்காளர்களைக் கொண்ட இந்த தொகுதியில் 46 விழுக்காட்டு மலாய் வாக்காளர்களும் 30 விழுக்காட்டு சீன வாக்காளர்களும் 18 விழுக்காட்டு இந்திய வாக்காளர்களும் 6 விழுக்காட்டு இதர இன வாக்காளர்களும் உள்ளனர்.


