புத்ராஜெயா, ஏப் 8 - தொழில்முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணை அமைச்சராக பதவியேற்று 100 நாட்கள் பூர்த்தியான நிலையில் நாடு மற்றும் மக்களின் பொருளாதார நிலையை மேலும் வலுப் பெறச் செய்வதை தமது பிரதான இலக்காகக் கொண்டு டத்தோ ஆர்.ரமணன் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கனவையும் இலக்கையும் வெற்றி பெறச் செய்யும் முயற்சியாக பொருளாதாரத்தை வலுப்படுத்த தாம் எண்ணம் கொண்டுள்ளதாக ரமணன் கூறினார்.
இந்த அளப்பரிய பணியில் தாம் மட்டுமல்லாத கூட்டுறவு மேம்பாட்டு துறை அமைச்சர் டத்தோ இவோன் பெனடிக்கும் முழு பங்களிப்பை வழங்குவதாக அவர் தெரிவித்தார்.
இந்த நியமனத்தை சிறப்பான முறையில் செயல்படுத்துவதற்காக மக்களும் நாடும் வழங்கிய அங்கீகாரமாகவும் பொறுப்புமிக்க கடமையாகவும் நான் பார்க்கிறேன். அரசியல் நிலைத்தன்மை, பொருளாதார வளர்ச்சி மற்றும் நாட்டின் சுபிட்சத்திற்கு நேர்மையுடனும் உயர்நெறியுடனும் ஆற்ற வேண்டிய பொறுப்பு மிக்க பதவியாக இது விளங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.
இந்த 100 நாள் பயணம் எனக்கு அமைச்சில் பல்வேறு அனுபவங்களையும் படிப்பினைகளைப் பெற்றுக் கொள்வதற்குரிய வாய்ப்பினை வழங்கியுள்ளது. அமைச்சின் இதரத் துறைகளுடன் இணைந்து முன்னோக்கிச் செல்வதற்குகான சந்தர்ப்பத்தையும் கொடுத்துள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரியல் துறையை மேம்படுத்துவதற்கான சிறந்த தளமாக இந்த பொறுப்பினை நான் பார்க்கிறேன் என்று பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ரமணன் கூறினார்.
இந்த பணி இலக்கை மேம்படுத்தும் விதமாகக் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகளை தாம் மறு சீரமைப்புச் செய்யவுள்ளதாகவும் அவர் சொன்னார்.


