கெய்ரோ, ஏப் 8 - காஸா போரில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல் நடவடிக்கைகளை ஏமனில் உள்ள ஹவுதி படைகள் அண்மையில் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இத்தாக்குதலின் ஒரு பகுதியாக பிரிட்டிஷ், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கப்பல்கள் மீது ராக்கெட்டுகள் மற்றும் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நேற்று நடத்தின.
செங்கடலில் ஒரு பிரிட்டிஷ் கப்பல் மற்றும் பல அமெரிக்க போர் கப்பல்களை தாங்கள் குறிவைத்ததாக அந்த ஈரான் ஆதரவுப் படை கூறியது. அதே நேரத்தில் அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் இஸ்ரேலிய துறைமுகங்களுக்குச் சென்று கொண்டிருந்த இரண்டு இஸ்ரேலிய கப்பல்களை அது தாக்கியது.
இந்த தாக்குதல் நடவடிக்கைகள் யாவும் கடந்த 72 மணி நேரத்தில் நடந்ததாக ஹவுதி ராணுவப் பேச்சாளர் யாஹ்யா சாரி தொலைக்காட்சி அறிக்கையில் தெரிவித்தார். எனினும், தாக்குதல்கள் பற்றிய கூடுதல் விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
ஏமனிலுள்ள முகல்லாவிலிருந்து தென்மேற்கே 102 கடல் மைல் தொலைவில் ஏடன் வளைகுடாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கப்பல் தாக்கப்பட்டதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று பிரிட்டிஷ் பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே முன்னதாக கூறியிருந்தது.
எச்சரிக்கையுடன் செயல்படவும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால் புகார் அளிக்கவும் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள கப்பல்கள் அறிவுறுத்தப் பட்டுளளன என்று அந்நிறுவனம் தெரிவித்தது. இருப்பினும், இந்த தாக்குதலுக்கான காரணகர்த்தா மேல் விவரங்களை தெரிவிக்கவில்லை.
இதனிடையே, நேற்று ஏடன் வளைகுடாவில் ஒரு கப்பல் அருகே ஏவுகணை பாய்ச்சப்பட்டது. ஆனால் இந்த சம்பவத்தில் கப்பலுக்கு எந்த சேதமோ கப்பல் சிப்பந்திகளுக்கு பாதிப்பும் ஏற்படவில்லை.
ஹவுதி படையினரின் தாக்குதல்கள் சூயஸ் கால்வாய் வழியாக மேற்கொள்ளப்படும் உலகளாவிய கப்பல் போக்குவரத்தை பெரிதும் பாதித்துள்ளது. இதனால் கப்பல் நிறுவனங்கள் தென்னாப்பிரிக்காவைச் சுற்றி நீண்ட மற்றும் அதிக விலை கொண்ட பயணங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஏமனில் உள்ள ஹவுதி இலக்குகள் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.


