NATIONAL

நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில்  முதியவர் பலி - குவா மூசாங்கில் சம்பவம்

8 ஏப்ரல் 2024, 4:06 AM
நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில்  முதியவர் பலி - குவா மூசாங்கில் சம்பவம்

குவா மூசாங், ஏப் 8 -  குவா மூசாங்-கோலா கிராய் சாலையின்  27வது கிலோமீட்டரில்  நேற்று நிகழ்ந்த  நான்கு  வாகனங்கள்  சம்பந்தப்பட்ட  விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்தோடு மேலும்  இருவர் படுகாயமடைந்தனர்.

நேற்று பிற்பகல் 3.45 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்து தொடர்பில் பொதுமக்களிடமிருந்து  தங்களுக்கு தகவல் கிடைத்ததாகக் குவா மூசாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் சிக் சூன் ஃபூ கூறினார்.

இச்சம்பவத்தின் போது மூன்று பயணிகளுடன்  வான் ஜுசோ அப்துல் ரஹ்மான் (வயது 70) என்ற முதியவர் ஓட்டிச் சென்ற பெரோடுவா கஞ்சில் ரகக் கார்   ஹோண்டா சிட்டி காருடன்  மோதியதாக அவர் சொன்னார்.

இந்த விபத்தில்  பலத்த காயங்களுக்குள்ளான கஞ்சில் காரின் ஓட்டுநரான அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

கோல கிராயிலிருந்து குவா மூசாங் நோக்கி அந்த கஞ்சில் கார் சென்று கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்து கொண்டிருந்த வாகனம்  கட்டுப்பாட்டை இழந்து  பாதிக்கப்பட்ட நபரின் காரை மோதியதோடு  பெரோடுவா அக்ஸியா மற்றும் புரோட்டான் பெசோனா  ஆகிய கார்களையும் மோதித் தள்ளியதாக அவர் குறிப்பிட்டார்.

காரின் முன் இருக்கையில் சிக்கிக் கொண்ட பாதிக்கப்பட்ட முதியவரை குவா மூசாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய உறுப்பினர்கள் மீட்டனர் என்றார் அவர்.

அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக குவா முசாங் மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்ட வேளையில் காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.