குவாந்தான், ஏப் 8 - கெந்திங் ஹைலண்ட்சில் உள்ள கெஸினோ சூதாட்ட
மையம் ஒன்றில் இரு கும்பல்களுக்கிடையே நேற்று நிகழ்ந்த கைகலப்பு
தொடர்பில் நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இருபத்து மூன்று முதல் 50 வயது வரையிலான பத்து உள்நாட்டு
ஆடவர்கள் சம்பந்தப்பட்ட அந்த கைகலப்பு தொடர்பில் நேற்று
விடியற்காலை 4.00 மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாகப் பெந்தோங்
மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஜைஹாம் முகமது கஹார்
கூறினார்.
இந்த சூதாட்ட மையத்தில் இருந்த இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட
கருத்து வேறுபாடு காரணமாக இந்த மோதல் ஏற்பட்டது போலீசாரின்
தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர்
சொன்னார்.
கைது செய்யப்பட்ட நான்கு ஆடவர்களும் விசாரணைக்காக 7ஆம் தேதி
தொடங்கி இரு தினங்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய
அவர், இந்த கைகலப்பு தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 147வது
பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
அந்த மோதலின் விளைவாக ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சைப்
பெறுவதற்காக அந்த நான்கு சந்தேகப் பேர்வழிகளும் பெந்தோங்
மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர் என்று அவர் அறிக்கை
ஒன்றில் தெரிவித்தார்.
இந்த கைகலப்பில் சம்பந்தப்பட்ட மற்ற நபர்களை சம்பந்தப்பட்ட
இடத்திலிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அடையாளம் காணும்
முயற்சியில் தாங்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.


