NATIONAL

கோல குபு பாரு இடைத் தேர்தல் பிரசாரத்திற்கு இங் ஸீ ஹான் தலைமையேற்பார்

8 ஏப்ரல் 2024, 3:27 AM
கோல குபு பாரு இடைத் தேர்தல் பிரசாரத்திற்கு இங் ஸீ ஹான் தலைமையேற்பார்

ஷா ஆலம், ஏப் 8 - அடுத்த மாதம்  11ஆம் தேதி நடைபெற உள்ள கோல குபு பாரு இடைத்தேர்தல் பணிகளை  ஒருங்கிணைக்க பக்காத்தான் ஹராப்பான் ஒரு குழுவை அமைத்துள்ளது.இந்த தேர்தல் குழுவின் இயக்குநராக  சிலாங்கூர் ஜனநாயக செயல் கட்சியின் (ஜசெக) செயலாளர் இங் ஸீ ஹான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தக்  குழுவில் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பீ யின் மற்றும் ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி யூசோப் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்  என்று சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் செயலாளர் டாக்டர் முகமது  கைருடின் ஓத்மான் கூறினார்.

இந்த குழு சிலாங்கூர் ஹராப்பான் கூட்டணி  திட்டமிட்டப் பணிகள் மற்றும் பிரச்சாரங்களை ஒருங்கிணைக்கும். அதே வேளையில் கோல  குபு பாரு இடைத்தேர்தல் பிரச்சாரம் தொடர்பான பணிகளை திட்டமிட்டு  ஹராப்பானின் மத்திய தலைமை மற்றும் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன்  ஒருங்கிணைக்கும் என்று அவர் சொன்னார்.

எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெறும்  வேட்பாளர் நியமன நாளிலிருந்து தேர்தல் தினமான  மே 11 வாக்குப்பதிவு நாள் வரை அதிகாரப்பூர்வமாக செயல்பட விருக்கும்  இக்குழு வேட்புமனு  தாக்கலுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக இயங்கும் வகையில் பல முக்கிய குழுக்களையும்  நிறுவும் என்று அவர் நேற்று சிலாங்கூர் ஹராப்பான்  கூட்டத்திற்குப் பின்னர் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஜசெக  சமர்ப்பித்த வேட்பாளர்களின் பட்டியலை மத்திய தலைமைத்துவம் முடிவு செய்த பிறகு வேட்புமனுத் தாக்கல் நாளுக்கு முன்பாக சிலாங்கூர் ஹராப்பான் வேட்பாளரின் பெயரை அறிவிக்கும் என்று கைருடின் கூறினார்.

கோல குபு பாரு தொகுதி  இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்  ஏப்ரல் 27ஆம் தேதியும்   தொடக்கக் கட்ட வாக்களிப்பு  மே 7ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கானி சலே அண்மையில் தெரிவித்துள்ளார்.

ஜசெக பிரதிநிதியான லீ கீ ஹியோங் புற்று  நோய் காரணமாகக் கடந்த மார்ச் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. 58 வயதான லீ,  கடந்த 2013 முதல்  மூன்று தவணைகளாக கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார்.

கடந்த  2022 இல் நடைபெற்ற   நாட்டின் 15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் ஏழாவது இடைத் தேர்தல் தேர்தல் இதுவாகும்.

கோல குபு பாரு இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் மொத்தம் 40,226 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். 39,362 வழக்கமான வாக்காளர்கள், 625 போலீஸ்காரர்கள், 238 ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் மனைவிகள் ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.