கோலாலம்பூர், ஏப் 8– நோன்புப் பெருநாளை முன்னிட்டு அனைத்து நெடுஞ்சாலைகளிலும் முதல் பிரிவு தனியார் வாகனங்களுக்கு இன்று முதல் நாளை வரை இரண்டு நாட்களுக்கு இலவச கட்டண விலக்களிப்பை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.
தேசிய எல்லைகளில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் கட்டிட சுங்கச்சாவடி (பி.எஸ்.ஐ.) மற்றும் ஜோகூரில் உள்ள தஞ்சோங் குபாங் டோல் சாவடி தவிர இதர அனைத்து டோல் சாவடிகளிலும் இந்த கட்டண விலக்குச் சலுகை அளிக்கப்படும் என்று பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.
இந்த கட்டணமில்லா சலுகை காலம் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு 12.01 மணிக்குத் தொடங்கி நாளை (செவ்வாய்கிழமை) இரவு 11.59 மணி வரை அமலில் இருக்கும். இந்த சலுகைத் திட்டத்திற்காக 3 கோடியே 76 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த டோல் கட்டணச் சலுகை குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இது அனைத்து குடிமக்களையும், குறிப்பாக நோன்பு பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சமூகத்தை மகிழ்ச்சிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. மேலும் பரிவின் வெளிப்பாடாகவும் அனைத்து மலேசியர்களுடனும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் விதமாகவும் இந்த முன்னெடுப்பு அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த கட்டண விலக்கு மூலம் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் வாகனங்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 24 லட்சத்து 60 ஆயிரமாக மில்லியன் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.
பிளஸ் நெடுஞ்சாலைகளில் MyPLUS-TTA செயலி மூலம் பரிந்துரைக்கப்பட்ட பயண நேர ஆலோசனை (டி.டி.ஏ.) அட்டவணையைப் பின்பற்றுவதன் மூலம் தங்களின் பயண நேரத்தை முன்கூட்டியே திட்டமிடும்படி வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் வாகனமோட்டிகளை நந்தா கேட்டுக் கொண்டார்
டோல் சாவடிகளில் நுழைதல் மற்றும் வெளியேறுதல் ஆகியவற்றின் அடிப்படையில் பயணிகள் மிகவும் பொருத்தமான பயண நேரங்களைத் தேர்வுசெய்ய இந்த செயலி உதவுகிறது.
சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சட்டங்கள் மற்றும் வசதிகள் இருந்தபோதிலும் அதன் ஆக்கத்திறன் நம்மை மட்டுமே சார்ந்திருக்கிறது என்பதை வாகனமோட்டிகளுக்கு அறிவுறுத்த விரும்புகிறேன். நாம் கவனமாக இருக்க வேண்டுமே தவிர நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனங்களை முழுமையாக நம்பியிருக்கக்கூடாது என்றார் அவர்.


