NATIONAL

கோல குபு பாரு இடைத் தேர்தலுக்கான வேட்பாளர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை- மாநில ஜசெக கூறுகிறது

5 ஏப்ரல் 2024, 7:57 AM
கோல குபு பாரு இடைத் தேர்தலுக்கான வேட்பாளர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை- மாநில ஜசெக கூறுகிறது

ஷா ஆலம், ஏப் 5 - அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கோல குபு பாரு தொகுதி  இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை சிலாங்கூர் ஜசெக இன்னும் முடிவு செய்யவில்லை.

காலியிடத்தை நிரப்பும் திறன் கொண்ட ஏராளமான உள்ளூர் தலைவர்களோடு மாநிலத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். ஆனால் வேட்பாளர் விவகாரம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று சிலாங்கூர் மாநில ஜசெக செயலாளர் இங் ஸீ ஹான் கூறினார்.

தற்போது வரை  மாநிலத் தலைவர்கள் சந்தித்து  இந்த விஷயம் குறித்து

விவாதிக்கவில்லை.  ஆனால் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை கவனிக்கும் பொருட்டு நாங்கள் களமிறங்கியுள்ளோம். ஏற்பாடுகள் விரிவாக நடந்து வருகின்றன என்று அவர் சொன்னார்.

கோல குபு பாருவில் உள்ள உள்ளூர் தலைவர்களோடு சிலாங்கூரின் பிற பகுதிகளில் உள்ள தலைவர்களும் எங்கள் தேர்வில் உள்ளனர் என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

கோல குபு பாரு இடைத்தேர்தல் தொடர்பான விஷயங்களை விவாதிப்பதற்கும் அக்கூட்டணியைப் பிரதிநிதிக்கக்கூடிய  பொருத்தமான வேட்பாளரை இறுதி செய்வதற்கும் பக்காத்தான் ஹராப்பான் (ஹராப்பான்)  விரைவில் கூட்டத்தை நடத்தும் என்று அதன் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன்  இஸ்மாயில் நேற்று கூறியிருந்தார்.

அந்தக் கூட்டத்தை நடத்துவதற்கான சமீபத்திய தேதியை தீர்மானிப்பதற்காக பிரதமரும் ஹராப்பான் கூட்டணியின் தலைவருமான   டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை தாம்  சந்திக்கவுள்ளதாக அவர் சொன்னார்.

சிலாங்கூரின் கோல குபு பாரு தொகுதி  இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 11ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று  அறிவித்தது.

இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்  ஏப்ரல் 27ஆம் தேதியும்   தொடக்கக் கட்ட வாக்களிப்பு  மே 7ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கானி சலே தெரிவித்தார்.

ஜசெக பிரதிநிதியான லீ கீ ஹியோங் புற்று  நோய் காரணமாக  கடந்த மார்ச் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. 58 வயதான லீ,  கடந்த 2013 முதல்  மூன்று தவணைகளாக கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார்.

கடந்த  2022 இல் நடைபெற்ற   நாட்டின் 15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் ஏழாவது இடைத் தேர்தல் தேர்தல் இதுவாகும்.

கோல குபு பாரு இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் மொத்தம் 40,226 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். 39,362 வழக்கமான வாக்காளர்கள், 625 போலீஸ்காரர்கள், 238 ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் மனைவிகள் ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.