கோலாலம்பூர், ஏப் 5 - நோன்புப் பெருநாளை முன்னிட்டு ‘பாதுகாப்பான
வீடு, பாதுகாப்பாக இடத்தை அடைவோம்‘ எனும் கருப்பொருளிலான
22வது ஓப் செலாமாட் சாலை பாதுகாப்பு இயக்கத்தை அரச மலேசிய
போலீஸ் படை இம்மாதம் 8ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை
அமல்படுத்தவுள்ளது.
இந்த நடவடிக்கையின் இலக்கு அடையப்படுவதை உறுதி செய்வதற்கும்
நோன்புப் பெருநாள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியுடனும்
கொண்டாடப்படுவதற்கும் ஏதுவாக பொது மக்களின் முழு ஒத்துழைப்பை
தாங்கள் பெரிதும் எதிர்பார்ப்பதாக தேசிய போலீஸ் படைத் தலைவர்
டான்ஸ்ரீ ரஸாருடின் ஹூசேன் கூறினார்.
பெருநாளின் போது தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்கும்
விடுமுறையைக் கழிக்க விரும்புவோருக்கும் ஒரு வேண்டுகோள். உங்கள்
பயணத்தை திட்டமிடுங்கள். பொறுமையைக் கடைபிடித்து சாலையில்
விவேகத்துடன் வாகனத்தைச் செலுத்துங்கள் என அவர் ஆலோசனை
கூறினார்.
பொருள் நிறைந்த இந்த பெருநாளை நமது நேசத்திற்குரிய ஜீவன்களுடன்
மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். உங்ளையும் உங்கள்
குடும்பத்தினரையும் நேசியுங்கள். விபத்துகளிலிருந்து விலகியிருங்கள்
என்று இன்று இங்கு 22வது ஓப் செலாமாட் இயக்கத்தை இயங்கலை
வாயிலாக தொடக்கி வைத்த போது அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, அரச மலேசிய போலீஸ் படையின் அனைத்து
உறுப்பினர்களின் சார்பாக நேசத்திற்குரிய மலேசியா மடாணி மக்கள்
அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளை அவர் தெரிவித்துக்
கொண்டார்.


