NATIONAL

கைதான இஸ்ரேலிய ஆடவருடன் தொடர்பில் இருந்த சந்தேகத்தின் பேரில் மேலும் நால்வர் கைது

5 ஏப்ரல் 2024, 3:16 AM
கைதான இஸ்ரேலிய ஆடவருடன் தொடர்பில் இருந்த சந்தேகத்தின் பேரில் மேலும் நால்வர் கைது

கோலாலம்பூர், ஏப் 5 - கடந்த வாரம் கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய ஆடவருடன் தொடர்பில் இருந்த  சந்தேகத்தின் பேரில் இரு பெண்கள் உள்பட  மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இருபத்தெட்டு முதல் 41 வயதுக்குட்பட்ட நால்வரும் நேற்று ஜோகூரில் உள்ள ஸ்கூடாய் மற்றும் கெலாங் பாத்தாவில் கைது செய்யப்பட்டதாக தேசிய  போலீஸ்  படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

ஜோகூரில் நேற்று மேலும் நான்கு நபர்களை நாங்கள் கைது செய்தோம்,  அவர்கள் இந்த வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணைக்கு உதவ முடியும் என்று நம்புகிறோம்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுடன்  தொடர்புடையவர்கள் என நம்பப்படும் அவர்களின் பங்களிப்பைக் கண்டறிய விசாரணைகள் நடந்து வருகின்றன என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

பிரதான சந்தேக நபரான 36 வயதான இஸ்ரேலிய நபர் உட்பட எட்டு பேர் இதுவரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய நபருக்கு துப்பாக்கிகளை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர்  தம்பதியினரின் தடுப்புக்காவல் அனுமதி இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில் தடுப்புக் காவலை நீட்டிப்பதற்கு நீதிமன்றத்தில்  விண்ணப்பம் செய்யப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

42 மற்றும் 40 வயதுடைய தம்பதியினர் கடந்த வெள்ளிக்கிழமை  சிலாங்கூரில் உள்ள ரமலான் சந்தையில் கைது செய்யப்பட்டு ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டதாக ரஸாருடின் முன்பு கூறியிருந்தார்.

மேலும், 38 வயதுடைய உள்ளூர் நபரும் பகாங்கின் கேமரன் ஹைலண்ட்ஸில் கைது செய்யப்பட்டார். அவர் இஸ்ரேலிய நபரின்  வாகன ஓட்டுநர் என்று நம்பப்படுகிறது

கடந்த வாரம் புதன்கிழமை ஜாலான் அம்பாங்கில் உள்ள ஹோட்டலில் ஆறு துப்பாக்கிகளுடன் இஸ்ரேலியர் நபர்  ஒருவர் கைது செய்யப்பட்டதாக ரஸாருடின் முன்னதாகக்  கூறியிருந்தார்.

36 வயதான அந்நபர் கடந்த  மார்ச் 12ஆம் தேதி  ஐக்கிய அரபு சிற்றரசிலிருந்து   பிரெஞ்சு கடப்பிதழைப் பயன்படுத்தி  மலேசியாவிற்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது. மேலும் குடும்ப தகராற்றில் மற்றொரு இஸ்ரேலிய நாட்டவரை தேடிக் கொல்ல  தாம் மலேசியா வந்ததாக அவ்வாடவர் விசாரணையில்  தெரிவித்துள்ளார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.