கோலாலம்பூர், ஏப் 4- அதிகாரம் என்பது நம்பிக்கை. மாறாக, சலுகை அல்ல. மக்களுக்கு சிறப்பானவற்றை வழங்குவதற்காக நாம் சுமக்க வேண்டிய நம்பிக்கைதான் அந்த அதிகாரம் ஆகும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்.
எதையும் சிறப்பாகவும் சரியாகவும் பொருத்தமான நிலையிலும் வைக்கும் முயற்சியாக இஸ்லா (சீர்திருத்தம்) என்ற வலுவான உணர்வின் அடிப்படையில் கட்சி ஆரம்பிக்கப்பட்டது என்று கெடிலான் ராக்யாட் கட்சியின் (கெஅடிலான்) தலைவருமான அவர் சொன்னார்.
ஆகவே, கொள்கைகளை வகுப்பதில் மக்களின் உரிமைகளுக்கும் நலனுக்கும் அதிமுக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என அவர் சொன்னார்.
நாம் இன்று சுமக்கும் பணிகளும் பொறுப்புகளும் நம்பிக்கையை அடிப்படையாக கொண்டவை. பொருள் பொதிந்த மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு அந்த நம்பிக்கையை நாம் தொடர வேண்டும் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.
அனைத்து கெஅடிலான் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுக்கும் கட்சியின் 25ஆம் ஆண்டு நிறைவுநாள் வாழ்த்துகள் என அவர் அப்பதிவில் தெரிவித்துக் கொண்டார்.


