NATIONAL

காஸா மீதான இஸ்ரேலியத் தாக்குதலில் ஏழு  உதவிப் பணியாளர்கள் பலி- மலேசியா கண்டனம்

4 ஏப்ரல் 2024, 2:18 AM
காஸா மீதான இஸ்ரேலியத் தாக்குதலில் ஏழு  உதவிப் பணியாளர்கள் பலி- மலேசியா கண்டனம்

புத்ராஜெயா, ஏப் 4-  காஸாவில் செயல்படும் வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்  (டபள்யூ.சி கே.) தொண்டு அமைப்பைச் சேர்ந்த ஏழு உதவிப் பணியாளர்களைப் பலி கொண்ட   இஸ்ரேலின் இலக்கு வான்வழித் தாக்குதலை மலேசியா வன்மையாகக் கண்டித்துள்ளது.

முற்றுகையிடப்பட்ட காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும்  தங்கள் குடிமக்களை இழந்து துக்கத்தில் இருக்கும் நாடுகளுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அமைச்சு  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலின் விளைவாக டபள்யூ.சி.கே. வின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என்பதை அறிந்து  வருத்தமடைகிறோம் என அந்த அறிக்கை கூறியது

அந்த அமைப்பின் செயல்பாடுகளை இடை நிறுத்தம் செய்வது உடனடி நிவாரண முயற்சிகளுக்கு இடையூறாக அமையும். பஞ்சம் மற்றும் நோயால்  ஏற்கனவே போராடிக்கொண்டிருப்பவர்களின் நிலையை இது மேலும் மோசமாக்கும் அது கூறியது.

இந்த தாக்குதலில் பலியானவர்களில் மூன்று பிரிட்டிஷ் பிரஜைகள், ஒரு போலந்து நாட்டவர், ஒரு ஆஸ்திரேலியர், ஒரு பாலஸ்தீனர் மற்றும் இரட்டை அமெரிக்கா-கனடிய குடியுரிமை பெற்ற ஒருவரும் அடங்குவர் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் துணைத் தூதரகக் கட்டிடத்தின் மீது சமீபத்தில்  நடத்தப்பட்ட தாக்குதல்கள்  ஆழ்ந்த கவலை அளிப்பதாக உள்ளது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இஸ்ரேலிய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) பாதுகாப்பு மன்றத்தின் 2728வது தீர்மானத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்பதோடு காஸாவில் மோதலை முடிவுக்கு வர வேண்டும் என்றும்  விஸ்மா புத்ரா வலியுறுத்தியது.

பாலஸ்தீன மக்கள் அனைத்துலக சமூகத்தின் உறுதியான ஆதரவுக்கும்  உதவிக்கும் தகுதியானவர்கள்.  காஸாவில் நிலவும் நெருக்கடிக்கு அமைதியான மற்றும் நிலையான தீர்வுக்கு கூட்டாக பாடுபடுவது அனைவரின் கடமையாகும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.