புத்ராஜெயா, ஏப் 4 - நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை மற்றும் விநியோகம் தொடர்பான பிரச்சனைகளைக் களத்தில் இறங்கி மதிப்பீடு செய்வதற்குக் கூடுதல் நேரத்தை ஒதுக்குமாறு அமைச்சர்களுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
தாம் கலந்து கொண்ட பல நிகழ்ச்சிகளின்போது பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் இதனை வலியுறுத்தியதாகத் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்திற்கு முன்பு இந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே பிரதமரின் செய்தி மற்றும் உத்தரவு அனைத்து அமைச்சர்களாலும் செயல்படுத்தப்படும் என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இதனிடையே, ஸ்டார்ட்அப் எனப்படும் தொடக்க நிறுவனங்கள், குறிப்பாகத் தொழில்நுட்பத் துறையினருக்காக எதிர்வரும் ஏப்ரல் 22-23 வரை நடைபெறும் கே.எல்.20 உச்சநிலை மாநாட்டின் முக்கியத்துவம் குறித்தும் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதாக ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளரான அவர் கூறினார்.
விரைவில், கே.எல்.20 மாநாடு தொடர்பில் விரைவில் அதிக விளம்பரங்களும் ஊக்குவிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். குறிப்பாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குப் பல முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என அமைச்சரவைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
நோன்புப் பெருநாளுக்குப் பிறகு இதன் தொடர்பான தொடர்ச்சியான அறிவிப்புகள் அல்லது ஊக்குவிப்பு நடவடிக்கைகள் பொருளாதார அமைச்சின் வாயிலாக வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.
கே.கே.மார்ட் சம்பவம் குறித்து கருத்துரைத்த ஃபாஹ்மி, கே.கே.சூப்பர்மார்ட் & சூப்பர்ஸ்டோர் குழுமத்தின் நிறுவனரும் நிர்வாகத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் சாய் கீ கான், மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்து மன்னிப்பு கோரியதை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளதாகச் சொன்னார்.
பேரரசரின் முகநூல் பக்கத்தில் இடுகையிடப்பட்ட அவரின் பதிவையும் அமைச்சரவை கவனத்தில் கொள்கிறது. மேலும்,கே கே.மார்ட் நிறுவனரை சந்திக்க அனுமதி வழங்கியதற்காகவும் மக்களைத் தூண்டுவதற்கு முயற்சிப்பவர்களுக்கு எதிராக உறுதியான மற்றும் விரைவான அமலாக்க நடவடிக்கை தேவை என்ற கோரிக்கைக்காகவும் மாமன்னருக்கு அமைச்சரவை நன்றி தெரிவித்துக் கொள்கிறது என்று ஃபாஹ்மி சொன்னார்.


