ஷா ஆலம், ஏப் 3: பழுதுபார்க்கும் பணியை மேற்கொள்ள 41 மசூதிகள் மற்றும் சூராவ்களுக்குக் கோத்தா கெமுனிங் தொகுதி RM46,500 ஒதுக்கீடு செய்தது.
இந்த நன்கொடையானது அடிப்படை தேவைகளை வழங்குவது மற்றும் உள்ளூர் சமூகத்திற்கான மத நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதை நோக்கமாகக் கொண்டது என சட்டமன்ற உறுப்பினர் எஸ் பிரகாஷ் கூறினார்.
"இந்த நன்கொடை மசூதிகள் மற்றும் சூராவ்களின் பராமரிப்பு, பொதுத் தேவைகள் வாங்குதல் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காகப் பயன்படுகிறது.
"நமக்கு வழங்கப்படும் உதவிகளைப் பாராட்டவும், அன்பை நீட்டிக்கவும் ரம்ஜான் மாதம் கற்றுக்கொடுக்கிறது. எனவே, தேவைப் படுபவர்களுடன் நமது வாழ்வாதாரத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்" என்று அவர் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் மத மற்றும் மனிதாபிமான செயல்களை வளர்ப்பதில் பங்கு வகிக்கும் மத நிறுவனங்களுக்குத் தனது தரப்பு எப்போதும் ஆதரவளிப்பதாகப் பிரகாஷ் தெரிவித்தார்.
"கோத்தா கெமுனிங் மக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் பிணைப்பை வலுப்படுத்த அனைத்து குடியிருப்பாளர்களிடையேயும் ஒற்றுமை உணர்வைத் தொடருமாறு நான் சமூகத்தைக் கேட்டு கொள்கிறேன்.
"இந்த நன்கொடையின் மூலம், உள்ளூர் சமூகத்திற்குப் பெரும் நன்மைகளை வழங்குவதுடன், சமூக மற்றும் மத நடவடிக்கைகளின் மையமாக விளங்கும் சமய நிறுவனங்களை மேலும் வலுப்படுத்த முடியும் என நம்பப்படுகிறது," என்று அவர் கூறினார்.


