NATIONAL

இந்திய தொழில் முனைவோருக்கான ஸ்புமி நிதி 6 கோடி வெள்ளியாக அதிகரிப்பு - டத்தோ ரமணன் தகவல்

3 ஏப்ரல் 2024, 7:49 AM
இந்திய தொழில் முனைவோருக்கான ஸ்புமி நிதி 6 கோடி வெள்ளியாக அதிகரிப்பு - டத்தோ ரமணன் தகவல்

கோலாலம்பூர், ஏப்.3- தெக்குன் நிதியகத்தில் இந்திய தொழில் முனைவோருக்கான ‘ஸ்புமி’ (SPUMI) பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட 3 கோடி வெள்ளி வருடாந்திர நிதியை, இனி 6 கோடி வெள்ளியாக இரட்டிப்பாக்குவதாகத் தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் அறிவித்தார்.

வர்த்தகத் துறையில் அதிகமான இந்தியர்கள் கால் பதிப்பதை ஊக்குவிப்பதோடு, அவர்கள் பொருளாதார ரீதியில் வலிமையானவர்களாகவும், சமுதாயத்தில் வெற்றிப் பெற்றவர்களாகவும் உருமாற்றும் வேட்கை கொண்டு, “பிரமாண்டத்தை நோக்கி ஸ்புமி” எனும் தாரக மந்திரம் தாங்கி இக்கடனுதவி திட்டம் தொடங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அதன் வழி, கிட்டத்தட்ட இரண்டாயிரம் இந்திய தொழில்முனைவோர் நேரடியாகப் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மடாணி பொருளாதார கட்டமைப்பின் வழி, இந்திய சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என்கிற  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் இலக்கை எட்டும் வகையில், அவர் தலைமையிலான மடாணி அரசாங்கத்தின் நன் முயற்சிதான் இத்திட்டம் என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

இங்கு தலைநகரிலிலுள்ள தெக்குன் நேஷனல் தலைமையகத்தில், ‘பிரமாண்டத்தை நோக்கி ஸ்புமி’ எனும் கருப்பொருள் தாங்கிய இரட்டிப்பு நிதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

தங்களின் தற்கால வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய திட்டம் கொண்டுள்ள அனைத்து இந்திய தொழில் முனைவோரும்,  இந்த தெக்குன் கடனுதவிக்கு விண்ணப்பம் செய்ய வரவேற்கப்படுகின்றனர்.

சிறிய அளவிலான குத்தகை, விவசாயம், அடிப்படை விவசாயம், மளிகைக் கடை, சேவைத் துறை, கைத்தொழில், இணையம் வழி வியாபாரம் போன்ற  சிறு நடுத்தர வியாபாரங்களில் ஈடுபட்டுள்ள இந்தியர்கள் தங்களை உயர்த்திக் கொள்வதற்கு இதுவே மிகச் சிறந்த தருணம்.

‘பிரம்மாண்டத்தை நோக்கி ஸ்புமி’ எனும் இந்த திட்ட இலக்கின் ஊடே, இந்திய தொழில்முனைவோர் இன்னும் ஒரு படி உயர வேண்டும் என்பதை உறுதி செய்ய, உள்நாட்டு வருமான வரித் துறையில் (LHDN) பதிவு பெற்ற உள்ளவர்களுக்கு  இந்த வாய்ப்பு திறக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

இத்திட்டத்தின் வழி, அனைத்துலகச் சந்தையிலும் வெற்றிகரமாக நுழையக் கூடிய திறமைசாலிகளை உருவாக்க முடியும் என தாம் பெரிதும் நம்புவதாக டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னதாக ‘ஸ்புமி’ வியாபாரக் கடனுதவியை பெற்று, வெற்றிகரமாக வணிகம் செய்து வருகிறவர்களுக்கு, இத்திட்டத்தின் வழி இன்னும் கூடுதல் வியாபாரக் கடன் உதவி கிடைக்க பெறுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும். அதோடு, “பெரிதாய் வளர்வோம்” (Groom Big) எனும் திட்டத்தின் வழி, தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை அமைச்சின் கீழ் செயல்படுகின்ற இதர ஏஜென்சிகளின் அனுகூலங்களையும்  பெறுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

முறையாக பதிவு பெற்ற தொழில்முனைவோர் அனைத்துலக சந்தையில் நுழைவதற்கும் இத்திட்டம் கைகொடுக்கும். தற்போதைய ‘ஸ்புமி’ தொழில்முனைவோர், உள்நாட்டு வருமான வரி துறையில் பதிவு பெற்றிருந்தால், ‘பிரம்மாண்டத்தை நோக்கி ஸ்புமி’ எனும் திட்டத்தின் வழி வெ.50 ஆயிரம் முதல் வெ.1 லட்சம் வரை கடனுதவி பெற முடியும் என்று விளக்கம் அளித்த டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், எதிர்வரும் 15 ஏப்ரல் 2024 முதல் இப்புதிய வியாபாரக் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றார்.

இதனிடையே, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறி வருவது போல, யாரும் இங்கு விடுபட மாட்டார்கள் என்று சுட்டிக்காட்டிய அவர்,  இதுபோன்ற தரம் உயர்த்தப் பட்டுள்ள இப்புதிய திட்டத்தின் வழி, மக்களின் வாழ்வாதாரம் உயரும் என தாம் பெரிதும் நம்புவதாகச் சொன்னார்.

இந்திய சிறு நடுத்தர தொழில் முனைவோருக்கு தொடர்ந்து  வியாபாரக் கடன் உதவி வழங்கி, அவர்களை உயர்த்தும் கடப்பாட்டில் தெக்குன் நேஷனல் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மற்றொரு நிலவரத்தில், மார்ச் 2024 வரை 28,808 இந்திய தொழில்முனைவோர் ‘ஸ்புமி’ வியாபாரக் கடனுதவியை பெற்றிருக்கின்றனர். அதன் மொத்த மதிப்பு வெ.450.5 மில்லியன் ஆகும். 2008ஆம் ஆண்டு ‘ஸ்புமி’ தொடங்கப்பட்டதிலிருந்து வெ.421.5 மில்லியன் மானியத்தை தெக்குன் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.