கோல லங்காட், ஏப் 3 - விரைவில் நடைபெறவிருக்கும் கோல குபு பாரு
சட்டமன்ற இடைத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பில்
ஜசெக வேட்பாளர் களமிறக்கப்படுவதற்கான சாத்தியத்தை சிலாங்கூர்
மாநில பக்கத்தான் ஹராப்பான் கோடி காட்டியுள்ளது.
ஒற்றுமை அரசின் உருவாக்கத்திற்கு துணை நின்ற பாரிசான் நேஷனல்
கூட்டணியும் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு
கோராத காரணத்தால் வேட்பாளரை முடிவு செய்யும் பணி ஹராப்பானுக்கு
எளிதாகிவிட்டது என்று மாநில ஹராப்பான் கூட்டணித் தலைவர்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இதன் வழி, தற்போதைய நடைமுறை அதாவது கோல குபு பாரு
தொகுதியை தற்காத்துக் கொள்வதற்கு ஏதுவாக ஜசெக வேட்பாளரை
நிறுத்தும் முடிவு உறுதி செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த தொகுதியை பாரிசான் நேஷனலும் கோரவில்லை. ஆகவே
ஹராப்பான் செயல்முறையில் எந்த மாற்றமும் இல்லை. இந்த
தொகுதியை ஜசெக தக்க வைத்துக் கொள்ளும் என நம்புகிறேன் என்று
அவர் கூறினார்.
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து
வந்த மறைந்த லீ கீ ஹியோங்கின் திட்டங்களும் முன்னெடுப்புகளும்
தொடரப்படுவதற்கு ஏதுவாக அந்த தொகுதியை மீண்டும் கைப்பற்றும்
முயற்சியில் ஹராப்பான் தீவிரமாக ஈடுபடும் என்றும் அவர் சொன்னார்.
கடந்த மூன்று தவணைகளாக கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினராக
இருந்து வந்த லீ, கடந்த மாதம் 22ஆம் தேதி புற்றுநோய் காரணமாகக்
காலமானார்.
கடந்த மாநிலத் தேர்தலில் அவர் 4,119 வாக்குகள் பெரும்பான்மையில்
கெராக்கான் கட்சியின் தியோ கியேன் ஹோங்கை லீ தோற்கடித்தார்.


