கோலாலம்பூர், ஏப் 2 - கடந்த 2023ஆம் ஆண்டு இறுதி வரை 4,100 கோடி வெள்ளி மதிப்பிலான 4,230 பசுமை தொழில்நுட்பத் திட்டங்களுக்கு மிடா எனப்படும் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
விரிவான 'முழு-அரசாங்க' அணுகுமுறை பசுமைத் தொழில்நுட்ப முதலீடுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கொடுத்துள்ளது என்று என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை துணை அமைச்சர் லியு சின் டோங் தெரிவித்தார்.
பசுமை தொழில்நுட்ப முதலீட்டில் மலேசியாவின் வாய்ப்புகளை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பெரும்பாலான அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் சோலார் பிரிவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது என்று அவர் இன்று மேலவையில் கேள்வி பதில் அமர்வின் போது கூறினார்.
பசுமைத் தொழில்நுட்பத்தில் முதலீட்டை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் விவேகத் திட்டம் தொடர்பில் செனட்டர் டத்தோ டொமினிக் லா ஹோ சாய் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.
பசுமைத் தொழில்நுட்பத்தில் முதலீட்டை மேலும் ஊக்குவிப்பதற்காக அடுக்கு அணுகுமுறை மூலம் பசுமைத் தொழில்நுட்ப ஊக்கத் தொகையை அரசாங்கம் மேம்படுத்தியுள்ளதாக லியூ கூறினார்.
பசுமை ஹைட்ரஜன், மின்சார வாகனம் சார்ஜ் செய்யும் நிலையங்கள் மற்றும் காற்றாலை ஆற்றல் உள்ளிட்ட பரந்த அளவிலான பசுமை முதலீடுகளை இந்த ஊக்குவிப்புக்கள் உள்ளடக்கியுள்ளதாக அவர் விவரித்தார்.
இந்த அணுகுமுறை புதிய மற்றும் ஏற்கனவே உள்ள நிறுவனங்களை முதலீடு செய்ய ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் 2050க்குள் கார்பன் இல்லாத நாட்டை அடைவதற்கான இலக்கை அடைய உதவும் என்று அவர் மேலும் கூறினார்.


