ஷா ஆலம், ஏப் 2: இல்திசம் ஆரம்ப குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி (இம்பாக்) திட்டத்தின் கீழ் வீட்டில் இருந்தவாறு மொத்தம் 1,000 பராமரிப்பாளர்கள் பயிற்சியில் பங்கு பெற இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இப்பட்டறை பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பான அறிவு மற்றும் திறன்களை மையமாகக் கொண்டது என யாயாசான் வாரிசான் அனாக் சிலாங்கூரின் (யவாஸ்) பொது மேலாளர் கான் பெய் நெய் கூறினார்.
"நாங்கள் 1,000 நபர்கள் பயிற்சி பெறுவதை இலக்காகக் கொண்டுள்ளோம். இந்த எண்ணிக்கையிலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட 200 பராமரிப்பாளர்கள் தலா RM2,000 மதிப்பிலான மானியத்தைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.
"பாடநெறி முழுவதும் அவர்களின் ஈடுபாடு, வீட்டிலுள்ள தூய்மை, பாதுகாப்பு நிலை மற்றும் பல அம்சங்களிலிருந்து 200 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்," என்று அவர் கூறினார்.
மூன்றாவது தொடர் பட்டறைக்கு இதுவரை மொத்தம் 147 நபர்கள் பதிவு செய்துள்ளதாகவும் இது மே மாதத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் பெய் நெய் மேலும் கூறினார்.
"இம்பாக் என்பது மாநில அரசாங்கத்தின் திட்டமாகும். இது வீட்டில் சிறு குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் பராமரிப்பாளர்களை அங்கீகரிப்பதாகும். இது அப்பெண்களுக்கு வேலை செய்ய ஆதரவையும் ஊக்கத்தையும் அளிக்க மிகவும் முக்கியமானது என்று நாங்கள் கருதுகிறோம்," என அவர் கூறினார்.


