கோலாலம்பூர், ஏப் 2- நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாடு முழுவதும்
பயணிப்பதற்காக செலாத்தான் ஒருங்கிணைந்த பஸ் முனையத்திற்கு
(டி.பி.எஸ்.) ஒதுக்கீடு செய்யப்பட்ட 330,000 விரைவு பேருந்து
டிக்கெட்டுகளில் 220,000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. இதில் கிழக்குக்
கரை மாநிலங்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்து விற்று தீர்ந்தன என்பது
குறிப்பிடத்தக்கது.
தற்போது வடக்கு மற்றும் தெற்கு தடங்களுக்கான கிட்டத்தட்ட 100,000 பஸ்
டிக்கெட்டுகள் மட்டுமே எஞ்சியிருப்பதாகப் போக்குவரத்து அமைச்சர்
அந்தோணி லோக் கூறினார்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்வோரின்
வசதிக்காகத் தற்காலிக லைசென்ஸ் விண்ணப்ப முறையின் (எல்.பி.எஸ்.)
கீழ் கடந்த மார்ச் 29ஆம் தேதி வரை 218 கூடுதல் பஸ் சேவைகளுக்குப்
பொது தரை போக்குவரத்து நிறுவனம் (அபாட்) அனுமதி வழங்கியுள்ளது
என அவர் சொன்னார்.
இந்த கூடுதல் பஸ் சேவைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால
அவகாசம் இன்று மாலை 4.00 மணியுடன் முடிவுக்கு வரும் போது இந்த
எண்ணிக்கை மேலும் உயர்வு காணும் என எதிர்பார்க்கிறோம். கடந்தாண்டு
கூடுதல் பஸ் சேவைக்கு 256 விண்ணப்பங்கள் பெறப்பட்டன என்றார் அவர்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு டி.பி.எஸ். பஸ் முனையத்தின்
நடவடிக்கைகளை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைத் தெரிவித்தார்.


