ஷா ஆலம், ஏப் 2- மாநிலத்திலுள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா
மையங்களைப் பிரபலப்படுத்துவதற்கும் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் ஏதுவாக கடந்த மார்ச் 17 முதல் 26 வரை சீனாவுக்கான
சுற்றுலா ஊக்குவிப்பு பயணத்தை சிலாங்கூர் அரசு மேற்கொண்டது.
சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸி ஹான்
தலைமையிலான இந்த பயணத்தின் போது சுமார் இரண்டரை கோடி
மக்கள் தொகையைக் கொண்ட டாலியான், ஷென்யாங், சாங்சுன்,
ஹார்பின் ஆகிய நகரங்கள் இலக்காகக் கொள்ளப்பட்டதாக டூரிசம்
சிலாங்கூர் அறிக்கை ஒன்றில் கூறியது.
சுற்றுலா முகவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உள்பட 500 பேர் கலந்து
கொண்ட இந்த நிகழ்வில் டாலியான் நகர சுற்றுலா செயல்குழுவும்
ஷியாமேன் கலாசார மற்றும் சுற்றுலா கழகமும் பங்கு கொண்டதாக அது
குறிப்பிட்டது.
இந்த சுற்றுலா ஒத்துழைப்பு நடவடிக்கைகள் வாயிலாக உள்நாட்டு
சுற்றுலாத் துறையில் வர்த்தக வாய்ப்புகள் பிரபலப்படுத்துவதற்கும்
பயணத் திட்டங்களை விரிவுபடுத்துவதற்கும் வாய்ப்பு கிட்டும் என்றும்
அந்த சுற்றுலா அமைப்பு நம்பிக்கைத் தெரிவித்தது.
இந்த பயணத்தின் போது முன்வைக்கப்பட்ட சுற்றுலா இடங்களில் சன்வே
லாகூன் தீம் பார்க், ஸ்ப்ளாஷ் மானியா, ஃபன் பார்க் காமுடா லுஜ் கார்டன்,
ஸ்கை மிரர் ஆகியவையும் அடங்கும்.
இதனிடையே, சிலாங்கூர் மீது சீன சுற்றுப்பயணிகள் மத்தியில் ஆர்வம்
அதிகரித்து வருவது சுற்றுப்பயணிகளைக் கவர்வதில் மாநில அரசுக்கு
உள்ள ஆற்றலை பிரதிபலிக்கும் வகையில் உள்ளதோடு இரு வழி
உறவுகளை வலுப்படுத்துவதற்குரிய வாய்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது என்று இப்பயணம் தொடர்பில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இங் ஸி
ஹான் கூறினார்.
கடந்தாண்டு 352,001 சீன சுற்றுபயணிகள் சிலாங்கூருக்கு வருகை புரிந்தனர்.
கடந்த 2022ஆம் ஆண்டைக் காட்டிலும் இது 73 விழுக்காடு அதிகமாகும்.








